தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

லடாக் முகாமுக்கு தளவாடங்களுடன் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானது; தேனியைச் சேர்ந்த ராணுவ வீரர் உயிரிழப்பு

2 mins read
8ba3836a-b3c8-4511-8fad-ced44b744adf
விமானம் மூலம் கோவைக்கு கொண்டு செல்லப்படும் திரு அழகுராஜாவின் உடல், பின்னர் அவரது சொந்த ஊரான துரைசாமிபுரத்துக்கு சாலை வழியாகக் கொண்டு செல்லப்படும் என்றும் இன்று அவருக்கு இறுதிச் சடங்கு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. படம்: ஊடகம் -

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரிலிருந்து லடாக் முகாமுக்கு ராணுவத் தளவாடங்களை ஏற்றிச் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானதில், ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார்; இருவர் படுகாயமடைந்தனர்.

தேனி மாவட்டம் குச்சனூர் அருகே உள்ள துரைசாமிபுரத்தை சேர்ந்த 43 வயதான அழகுராஜா எனும் ராணுவ வீரர், நேற்று முன்தினம் தளவாடங்களுடன் புறப்பட்ட வாகனத்தை ஓட்டிச் சென்றார். அவருடன் வேறு 2 ராணுவ வீரர்களும் சென்றனர்.

ஜார்கண்ட் மாநிலம் ராம்கர் மாவட்டம் சுட்டுப்பாலு என்ற இடத்தில் நேற்று முன்தினம் காலை சுமார் 7 மணியளவில் மலைப்பாதையில் வாகனம் சென்று கொண்டிருந்தபோது, திடீரென அந்த வாகனம், அங்குள்ள பாறையில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் அழகுராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் வந்த மற்ற 2 ராணுவ வீரர்களும் படுகாயம் அடைந்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

விபத்தின் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

விமானம் மூலம் கோவைக்கு கொண்டு செல்லப்படும் திரு அழகுராஜாவின் உடல், பின்னர் அவரது சொந்த ஊரான துரைசாமிபுரத்துக்கு சாலை வழியாகக் கொண்டு செல்லப்படும் என்றும் இன்று அவருக்கு இறுதிச் சடங்கு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

கடந்த 15 ஆண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றி வரும் திரு அழகுராஜா, விடுமுறைக்குப் பிறகு கடந்த மார்ச் மாதத்தில்தான் பணிக்குத் திரும்பினார் என்று அவரது உறவினர் ஒருவர் குறிப்பிட்டார்.

அழகுராஜாவுக்கு மனைவி மற்றும் 14 வயதில் மகளும், 9 வயதில் மகனும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்