திருப்போரூர்: திருப்போரூர் அருகே நிலத்தகராறு காரணமாக நடத்தப் பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் தொடர்பில், திமுக எல்எல்ஏ இதயவர்மன் உள்பட 12 பேரை தனிப்படை போலிசார் கைது செய்துள்ளனர்.
"திமுக எம்எல்ஏ இதயவர்மன் தரப்பில் 11 பேரும் அவருக்கு எதிராக புகார் கொடுத்தவரின் தரப்பில் ஒருவரும் கைது செய்யப்பட் டுள்ளனர்," என்று மாமல்லபுரம் துணை போலிஸ் அதிகாரி சுந்தர வதனம் தெரிவித்துள்ளார்.
திருப்போரூரை அடுத்த செங்காடு கிராமம் அருகே இரு தரப்பினருக்கு இடையே சொத்துப் பிரச்சினையால் தகராறு ஏற்பட்டது.
அப்போது துப்பாக்கியால் சுடப்பட்டதில் ஒருவா் காயமடைந்தார்.
இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து இருதரப்பினருமே திருப்போரூா் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்நிலையில், திமுக எம்எல்ஏ, அவரது தந்தை மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவானது.
இதையறிந்த இதயவா்மனும் அவரது தந்தை லட்சுமிபதியும் தலைமறைவாகினா். அவர்கள் இரு வரையும் தனிப்படை போலிசார் தேடிவந்தனா்.
இந்நிலையில், எம்எல்ஏ இதய வா்மனை சென்னை மேடவாக்கம் பகுதியில் வைத்து தனிப்படை போலிசார் கைது செய்தனா்.
அத்துடன் அவரது தம்பி நிா்மல், மைத்துனா் வசந்த், ஓட்டுநா் கந்தன், செங்காடு பகுதியைச் சோ்ந்த ரமேஷ், வாசுதேவன், யுவராஜ் ஆகிய அறுவரையும் கைது செய்த போலிசார், அவர்களிடம் 5 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தினா்.
அவா்களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்து, அவா்களை செங்கல்பட்டு நீதிமன்ற நீதிபதி காயத்ரிதேவி முன்னிலையில் முன்னிலைப்படுத்தி புழல் சிறையில் அடைத்தனா்.
இதனிடையே, துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்து தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இமயம் சேகா், மருத்துவமனையில் இருந்து தப்பிச்சென்று விட்டதாகக் கூறப் படுகிறது. அவரை போலிசார் தேடி வருகின்றனா்.
இந்நிலையில், திமுக எம்எல்ஏ இதயவர்மன் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் சட்டம் தனது கடமை யைச் செய்துள்ளதாக தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "திமுகவில் தற்போது துப்பாக்கி கலாசாரம் தலைதூக்கி உள்ளது. இதற்கு திருப்போரூா் திமுக சட்டப்பேரவை உறுப்பினா் இதய வா்மனின் செயல் எடுத்துக் காட்டாக உள்ளது. ஆட்சியில் இல்லாத நிலையில் கூட திமுகவினா் செயல்பாடு இப்படி உள்ளதென்றால் ஒருவேளை இவா்கள் ஆட்சிக்கு வந்துவிட்டால், மக்களின் நிலைமை என்னவாகும்?" என்று கேள்வி எழுப்பினார்.
"நானும் உரிய உரிமத்துடன் இரண்டு துப்பாக்கிகளை வைத்துள்ளேன்," என்று தெரிவித்த ஜெயக்குமார், "சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு, ஒரு சட்டமன்ற உறுப்பினர் கள்ளத்துப்பாக்கியால் சுட்டதை ஏற்கமுடியாது," என்றும் தெரிவித்தார்.

