சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி ஏற்படும் என்று சொல்லப்பட்டு வரும் வேளையில் கூட்டணிக் கணக்கை மாற்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி முடிவெடுத்து இருப்பதாக விகடன் இணையச் செய்தி தெரிவிக்கிறது.
ஏற்கெனவே கூட்டணியில் இருக்கும் தேமுதிக, தமாகவுடன் புதிதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக), இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், இஸ்லாமிய அமைப்புகளையும் இணைத்து 'மெகா' கூட்டணி அமைக்க அதிமுக தலைமை திட்டமிட்டு இருப்பதாக அச்செய்தி விவரிக்கிறது.
"கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியில் 2021 சட்டமன்றத் தேர்தலுக்கான அரசியல் காய் நகர்த்தல்களையும் தொடங்கி விட்டார் எடப்பாடி. கடந்த வாரம் அதிமுகவின் மூத்த தலைவர்களுடன் இதுகுறித்து விவாதித்து பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. 2016 சட்டமன்றத் தேர்தலில் தன்னிச்சையாக 41% வாக்குகளைப் பெற்ற அதிமுக, 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும் உள்ளாட்சித் தேர்தலிலும் படுவீழ்ச்சியைச் சந்தித்தது. சரிபாதியாகக் குறைந்தது வாக்கு சதவிகிதம். அதனால் இந்த முறை வாக்கு விழுக்காட்டை அதிகரிப்பதற்கான சில அதிரடித் திட்டங்களைத் தீட்டியிருக்கிறது அதிமுக.
"50% வாக்குகள் லட்சியம்; ஆனால், குறைந்தது 45% வாக்குகளைக் கைப்பற்றிவிட்டாலே எளிதாக வென்றுவிடலாம் என கணக்கு போடப்பட்டிருக்கிறது. பாஜகவுடன் கூட்டணி வைக்கக்கூடாது என்பதே அதிமுகவில் இருக்கும் பெரும்பாலான மூத்த தலைவர்களின் கருத்தாக இருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக மீதிருந்த எதிர்ப்பலையால்தான் அதிமுக படுதோல்வியைச் சந்தித்ததாக விவாதிக்கப்பட்டிருக்கிறது. பாமகவின் வாக்குகளும் பெரிதாக உதவவில்லை; அதனால் பாமகவையும் கூட்டணியில் வைத்துக்கொள்ள வேண்டாம் எனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
"வடதமிழகத்தில் பாமகவால் ஏற்படும் வாக்கிழப்பைச் சமாளிக்க திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சியை எப்படியும் கூட்டணிக்குள் கொண்டு வந்துவிடவேண்டும் எனவும் திட்டமிடப்பட்டிருக்கிறது. மேலும், பாஜகவை சேர்க்காவிட்டால் இஸ்லாமியர் வாக்குகளைப் பெற்றுவிடலாம். இஸ்லாமிய அமைப்புகளையும் கூட்டணிக்குள் கொண்டு வந்துவிடலாம் என அதிமுக தலைவர்கள் பேசியுள்ள னர்," என்று விகடன் கூறியுள்ளது.
பாஜக, பாமக வெளியே; விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளே

