சென்னை: தமிழகத்தில் இன்னும் பத்து நாட்களில் கொரோனா பாதிப்பைப் பெருமளவு குறைக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்க கூடுதலாக ஆயிரத்திற்கும் மேலான டாக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
"வீடு வீடாக சென்று கொரோனா பாதிப்பைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. தமிழகத்தில் 10 நாட்களில் கொரோனா பாதிப்பு குறைய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
"மக்களின் ஒத்துழைப்பு இருந்தால்தான் கொரோனா பாதிப்பைக் குறைக்க முடியும். சென்னை மாநகராட்சிப் பகுதியில் 600க்கும் மேற்பட்ட காய்ச்சல் முகாம்கள் நடத்தப்படுகின்றன. சென்னையில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது.
"தமிழக மக்களின் வாழ்வாதாரத்திற்குத் தேவையான எல்லா உதவிகளையும் அரசு செய்கிறது. தமிழகத்தில்தான் அதிகளவு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக தமிழகத்திற்கு ரூ.672 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது.
மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா
கோவை மாவட்ட ஆட்சியர் ராஜாமணிக்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதை
யடுத்து, அவர் தற்போது கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனு
மதிக்கப்பட்டுள்ளார்.
ஊரடங்கு முடிந்தும்
அதிகரித்த தொற்று
கொரோனா கிருமி மிக வேகமாக பரவி வந்ததால் மதுரை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் ஜூலை 14 வரை முழு ஊரடங்கு என தமிழக அரசு அறிவித்திருந்தது. முழு ஊரடங்கு நிறைவடைந்து நேற்று முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.
முழு ஊரடங்கு முடிவடைந்த நிலையில் நேற்று மதுரையில் மேலும் 295 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மதுரை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,285 ஆக உயர்ந்துள்ளது.

