கும்மிடிப்பூண்டி: ஆந்திராவில் இருந்து சென்னைக்கு காரில் கடத்தி வரப்பட்ட ரூ. 5.22 கோடி பணத்தை பறிமுதல் செய்த போலிசார், காரில் இருந்த மூவரை வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
இரு மாநிலத்தையும் சேர்ந்த அரசியல் புள்ளிகளுக்கிடையே இந்த சட்ட விரோதப் பணப் பரிமாற்றம் நடந்துள்ளதா எனவும் வருமான வரித்துறையினர் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
ஆந்திராவில் இருந்து சென்னைக்கு வந்த டொயோட்டா பார்ச்சூனர் காரை தடுத்து நிறுத்திய போலிசார், காரில் இருந்தவர்களிடம் 'இ-பாஸ்' அனுமதிச் சீட்டைக் கேட்டனர்.
காரில் இருந்த ஆந்திர மாநிலம், ஓங்கோல் பகுதியைச் சேர்ந்த லட்சுமி நாராயணா, 55, நாகார்ஜுனா, 32, சென்னை, மண்ணடியைச் சேர்ந்த வசந்த் அரிகிருஷ் ணன், 31, ஆகியோரிடம் 'இ-பாஸ்' இல்லாததால் அவர்களை மீண்டும் ஆந்திரா வுக்கே திரும்பிச் செல்லும்படி போலிசார் கூறினர். அவர்கள் ஏற்க மறுத்து போலிசாரிடம் வாக்குவாதம் செய்தனர்.
இதையடுத்து, போலிசார் நடத்திய சோதனையில் காரின் பின்பகுதியில் கட்டுக் கட்டாக இருந்த பணம் கண்டுபிடிக்கப்பட்டது.

