சென்னை: தமிழகத்தில் பின்தங்கி யுள்ள பொருளாதார வளர்ச்சியை சரியான பாதையில் முடுக்கிவிடு வதற்கு ஏதுவாக மாநிலத்தில் மொத்தம் ஆறு நிறுவனங்கள் முதலீடு செய்வதற்கு முன்வந்துள்ளன. இதற்கு தமிழக அரசும் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த கோடிக்கணக்கிலான முதலீட்டு உத்தியால் ஆயிரக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்ற உத்தரவாதமும் அளிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், எந்தெந்த நிறுவனங்கள், எந்தெந்த தொழில்களில் முதலீடு செய்துள்ளன என்பது குறித்த தகவலும் வெளியிடப்பட்டுள்ளது.
கொரோனா கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் நடப்பில் இருந்துவரும் ஊரடங்கு உத்தரவால் தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள் எல்லாம் முழுவீச்சில் செயல்பட முடியாமல் முடங்கின.
இதனால், பல கோடி ரூபாய்களில் தமிழக அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.
அத்துடன், பெரும்பாலான மக்களும் தங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி விட்டதாகவும் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், நான்கு சக்கர வாகனங்களில் பயன்படுத்தப்படும் 'ஏர்பேக் இன்ஃபிளேட்டார்' தயா ரிக்கும் டைசெல் கார்ப்பரேஷன் நிறுவனம் காஞ்சிபுரத்தில் ரூ.900 கோடியை 3 கட்டமாக முதலீடு செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் 600 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.515 கோடி முதலீட்டில் ஐடிசி நிறுவனம் கோவை தேக்கம்பட்டியில் தொடங்கப்பட உள்ளது. இதன் மூலம் 330 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது.
மின்னணு வாகனம் - லித்தியம் அயன் பேட்டரி தயாரிக்கும் நிறு வனம் ரூ.600 கோடி முதலீட்டை கிருஷ்ணகிரியில் 2 கட்டமாக மேற்கொள்ள உள்ளது. இதனால் 2,925 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
ரூ.600 கோடி முதலீட்டில் கார்பன் தயாரிக்கும் ஃப்லிப்ஸ் கார்பன் நிறுவனம் தொடங்கப்பட உள்ளது. 2020க்குள் தேர்வாய் கண்டிகையில் இந்நிறுவனம் உற்பத்தியைத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் 300 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
பெரிய பெரிய நிறுவனங்கள் எல்லாம் தமிழகத்தில் முதலீடு செய்ய முன்வரவேண்டும் என முதல்வர் பழனிசாமி அண்மையில் அழைப்பு விடுத்திருந்தார். அந்த அழைப்புக்கு கைமேல் பலன் கிைடத்துள்ளது.

