சென்னை: "திருக்குறள் அதி அற்புதமான நூல். இந்த நூலைப் படித்து இந்தியா முழுவதும் உள்ள இளைஞர்கள் பலரும் பயன்பெறுவர் என நம்புகிறேன்," என பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கப் பதிவில் தமிழில் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு தமிழக முதல்வர் பழனிசாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் நன்றி தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடி திருக்குறளை மேற்கோள் காட்டி, "தெய்வப் புலவர் திருவள்ளுவரின் எழுத்துகள் நம்பிக்கையும் ஒளியும் பரப்பிடும் வல்லமை வாய்ந்தவை," என்று பதிவிட்டிருந்தார்.
பிரதமரின் கருத்து குறித்து முதல்வர் தனது டுவிட்டர் பக்கத்தில், "உலகப் பொதுமறையாம் திருக்குறள் நீதிநூல் மட்டுமின்றி, வாழ்வியல் நூலாகவும் திகழ்கிறது. உலகிலேயே அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூல்களில் திருவள்ளுவர் இயற்றிய திருக்குறளும் ஒன்றாகும். இத்த கைய சிறப்புமிக்க திருக்குறளை இந்தியா முழுவதும் உள்ள இளைஞர்கள் படித்து பயன்பெற வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது தமிழுக்கும் தமிழருக்கும் பெருமை சேர்ப்பதாகும்,'' என்று கூறியுள்ளார்.

