சென்னை: சென்னையில் 80% கொரோனா நோயாளிகள் குணமடைந்துவிட்டதாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினமும் உயர்ந்து வருகிறது. அதேபோல் மற்றொரு புறம் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
இருப்பினும், வெள்ளிக்கிழமை ஒரே நாளில் கொரோனா கிருமித் தொற்றால் 79 பேர் இறந்துள்ளது தமிழக மக்களிடம் அதிர்ச்சியைக் கூட்டியுள்ளது.
தமிழகத்தில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 4,538 புதிய கொவிட்-19 தொற்று பதிவானது. இவர்களையும் சேர்த்து மாநிலத்தில் 1,60,907 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 110,807ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 2,315 பேர் உயிரிழந்துள்ளனர்.
கிருமியால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சென்னையில் குறைந்து வரும் நிலையில், தென் மாவட்டங்களில் இப்பாதிப்பு உயர்ந்து வருகிறது.
இப்பாதிப்பு குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக் கையில், "சென்னையில் இதுவரை 83,377 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 80% நோயாளிகள் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
"அதிகபட்சமாக தண்டையார்பேட்டை மண்டலத்தில் 88%, ராயபுரத்தில் 87%, மணலியில் 85%, பெருங்குடியில் 83% குணம் அடைந்துள்ளனர்.
"இறப்பு விகிதத்தை பொறுத்த வரை 1.63% ஆக உள்ளது," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, தூத்துக்குடியில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசு கையில், பிளாஸ்மா தானம் செய்ய மக்கள் முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
கொரோனா உயர் சிகிச்சைக்கு ரூ.76.5 கோடி செலவில் அதிநவீன உயர் ஓட்ட ஆக்சிஜன் கருவிகள் வாங்கப்பட்டு உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

