கந்தசஷ்டி கவசம் குறித்து அவதூறு பரப்பிய அமைப்பு மீது சட்ட நடவடிக்கை

கந்தசஷ்டி கவசம் குறித்து அவதூறு பரப்பிய அமைப்பு மீது சட்ட நடவடிக்கை

2 mins read
b5607bbc-b133-45dd-b4d0-212edec172e3
கந்தசஷ்டி கவசத்தை இழிவாக சித்திரித்து காணொளி வெளியிட்ட அமைப்புக்கு கடும் தண்டனை தரவேண்டும் என எழும்பூர் நீதிமன்றம் அருகே முழங்கிய பாஜகவினர். படம்: ஊடகம் -

சென்னை: கந்தசஷ்டி கவசம் குறித்து அவதூறு பரப்பிய அமைப்புக்கு இந்து சமய அற நிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அறிக்கை வெளி யிட்டுள்ள அவர், "கந்தசஷ்டி கவசம் தமிழ் மக்களின் இல்லங்களில் அன்றாடம் ஒலிக்கும் பக்திப் பாடல். அதனை இழிவுபடுத்தி, தவறாக அர்த்தம் கற்பிக்கப்பட்டுள்ளது மிகவும் கண்டிக்கத்தக்கது.

"பாடலை தவறான முறையில் விமர்சனம் செய்த 'கறுப்பர் கூட்டம்' என்று அழைக்கப்படும் அமைப்பின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்," எனத் தெரிவித்துள்ளார்.

கந்தசஷ்டி கவசம் பாடல் குறித்து 'கறுப்பர் கூட்டம்' என்ற யூடியூப் ஒளிவழியில் காணொளிப் பதிவு ஒன்று அவதூறாக வெளி யானது. இதற்கு பாஜக, இந்து மக்கள் கட்சியினர், இந்து மத அமைப்பினர் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதுகுறித்து போலிசிலும் புகார் அளிக்கப்பட்டது.

இந்த காணொளி சர்ச்சை விவகாரம் தொடர்பில், சென்னை மத்திய இணைய குற்றப்பிரிவு போலிசார் விசாரணையை முடுக்கி விட்டனர்.

இதைத்தொடர்ந்து, 'கறுப்பர் கூட்டம்' ஒளிவழி நிர்வாகி, சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த செந்தில்வாசன், 49; சுரேந்தர் நடராஜன், 38, ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

மத்திய குற்றப்பிரிவு போலிசார் கைது செய்யப்பட்டவர்களை ராயபுரத்தில் உள்ள சென்னை எழும்பூர் நீதிமன்ற நீதிபதி ரோஸ்லின் துரை வீட்டில் முன்னிலைப்படுத்தினர்.

அவர்களை வரும் 30ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலின் கீழ் சிறையில் அடைக்க நீதிபதி உத்தர விட்டார். இதையடுத்து, இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதற்கிடையே, எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் திரண்டிருந்த பாஜகவினர் முழக்கங்களை எழுப்பினர்.

இதையடுத்து, தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக பாஜகவினர் மீது 5 சட்டப்பிரிவுகளின் கீழ் எழும்பூர் போலிசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.