கொரோனா பாதிப்பால் உயிரிழந்த விருத்தாசலம் வட்டாட்சியர்: விலகி விடைபெறுகிறேன்; மீண்டு வந்து மீண்டும்...

கொரோனா பாதிப்பால் உயிரிழந்த விருத்தாசலம் வட்டாட்சியர்: விலகி விடைபெறுகிறேன்; மீண்டு வந்து மீண்டும்...

2 mins read
7f0c5f89-7e10-4ee6-b4e2-935bec430630
இயற்கையின் மீதும், வரலாற்றின் மீதும் தீராத காதல் கொண்டவர்,  என வருணிக்கப்படும் அவர், கொரோனா தொற்றுப் பரவல் காலத்தில், வேலைக்கு காலநேரமெல்லாம் பார்க்காமல் கடுமையாகப் பணியாற்றியதாகக் கூறப்படுகிறது. படம்: இந்திய ஊடகம் -

விருத்தாசலத்தில் வட்டாட்சியராக பணிபுரிந்த கவியரசு, 45, கொரோனா தொற்று சிகிச்சை பலனின்றி நேற்று (ஜூலை 18) இரவு உயிரிழந்தார்.

இவருக்கு கடந்த பத்து நாட்களுக்கு முன்பு கொரோனா உறுதி செய்யப்பட்டு சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

களப்பணியில் வருவாய்துறையினர் ஈடுபட்டு வருவதால் வட்டாட்சியர் ஒருவர் உயிரிழந்திருப்பது கடலூர் மாவட்டத்தில் உள்ள வருவாய் துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அனைவரிடமும் நன்கு பழகக்கூடிய திரு கவியரசு, மக்களின் பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்க்க களத்தில் இறங்கிவிடுவார் என்றும் அதன் காரணமாகவே அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாகவும் அவரது நெருங்கிய வட்டாரம் தெரிவிக்கிறது.

இயற்கையின் மீதும், வரலாற்றின் மீதும் தீராத காதல் கொண்டவர், என வருணிக்கப்படும் அவர், கொரோனா தொற்றுப் பரவல் காலத்தில், வேலைக்கு காலநேரமெல்லாம் பார்க்காமல் கடுமையாகப் பணியாற்றியதாகக் கூறப்படுகிறது.

ஜூலை 10-ம் தேதி அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அன்று இரவு மருத்துவமனையில் இருந்தபோது தனது முகநூலில், தம்முடன் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டதுடன், "சிகிச்சையில் உள்ளதால் வருவாய் வட்டாட்சியர் பணியில் இருந்து விலகி விடைபெறுகிறேன். மீண்டும் மீண்டு வந்து அனைவருக்கும் நன்றி சொல்வேன்," என்று குறிப்பிட்டிருந்தார். அவர் மரணத்தின் பிடியிலிருந்து மீளாதது மிகுந்த வருத்தம் அளிப்பதாக அவருடன் பணியாற்றியவர்கள் குறிப்பிட்டனர்.

கொரோனா தொற்று பரவ ஆரம்பித்ததும் மனைவியையும் மகளையும் கோவையில் உள்ள உறவினர் வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டு இவர் மட்டும் விருத்தாசலத்தில் வட்டாட்சியர் இல்லத்திலேயே தங்கியிருந்தார் என்று கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்
கொரோனாஉயிரிழப்பு