திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சின்னாளபட்டி சுங்குடி சேலைகளுக்கு புகழ்பெற்ற ஊராகும்.
இப்பகுதியில் ஐயாயிரத்துக்கும் மேற்பட்டோர் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுங்குடி சேலை, பட்டுச் சேலை, கோரா பட்டுச் சேலை உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இங்குள்ள கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் மட்டும் சுமார் இரண்டாயிரம் நெசவாளர்கள் கைத்தறி கோரா பட்டு சேலைகளை நெய்து வருகின்றனர்.
இங்குள்ள கூட்டுறவுச் சங்கங்கள் நெய்யப்படும் சேலைகளை கோ-ஆப்டெக்ஸ் நிர்வாகம் கொள்முதல் செய்வது வழக்கம். கொரோனா ஊரடங்கால் கோ-ஆப்டெக்ஸ் நிர்வாகம் சேலைகளை கொள்முதல் செய்யவில்லை.
இதனால் கூட்டுறவுச் சங்கங்களில் சேலைகள் தேக்கமடைந்துள்ளன. நெசவாளர்களுக்குச் சம்பளம் கொடுக்க முடியாமல் கூட்டுறவுச் சங்கங்கள் திணறி வருகின்றன.
இதேபோல் கோரா பட்டுச் சேலை உற்பத்தி செய்யும் தனியார் உற்பத்தியாளர்களும் வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு சேலைகளை அனுப்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.
இதனால் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான கோரா பட்டுச் சேலைகள் தேங்கியுள்ளன.
ஆடி மாதங்களில் அம்மனுக்கு விரதம் இருக்கும் பெண்கள் மற்றும் ஓம் சக்தி வழிபாடு செய்யும் பெண்கள் சிவப்பு, மஞ்சள் நிறத்துடன் வேப்பிலை படம் அச்சடிக்கப்பட்ட சுங்குடிச் சேலைகளை அதிகளவில் வாங்குவது வழக்கம்.
தொடர்புடைய செய்திகள்
இதற்காக ஆடி மாதங்களில் சுமார் ஒரு லட்சம் சுங்குடிச் சேலைகள் தயாரிக்கப்படும்.
ஆனால் இம்முறை கோயில்கள் திறக்கப்படாததால் சுங்குடிச் சேலை உற்பத்தி பாதிப்படைந்துள்ளது.
அதனால் சுமார் இரண்டாயிரம் தொழிலாளர்கள் வருமானமின்றி தவித்து வருகின்றனர்.

