சென்னை: தமிழகத்தில் கொரோனா கிருமித்தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,481ஆக அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், கொவிட்-19 பாதிப்பு உள்ளவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 1.70 லட்சத்தைக் கடந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
திங்கட்கிழமை ஒரே நாளில் 4,979 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அண்மைய சில தினங்களாக மாநிலத்தில் குறைந்தபட்சம் தினமும் ஐம்பது பேர் பலியாகி வருகின்றனர்.
"தமிழகத்தில் இப்போது 112 கொரோனா கிருமிப் பரிசோதனை மையங்கள் செயல்படுகின்றன. நேற்று முன்தினம் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொவிட்-19 நோயிலிருந்து முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதன் மூலம் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 17 ஆயிரத்து 915ஆக உயர்ந்துள்ளது.
தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 50,294 என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதற்கிடையே சென்னையில் கிருமித்தொற்றுப் பரவலைத் தடுக்கும் விதமாக சென்னையின் சில முக்கிய பகுதிகள் மாநகராட்சியின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

