சென்னை: தமிழக சுகாதாரத் துறைச் செயலர் ராதாகிருஷ்ணனின் குடும்பத்தாருக்கு (படம்) கிருமித் தொற்று ஏற்பட்டுள்ளது. அவரது மனைவி, மகன் உள்ளிட்ட 4 பேருக்கு கொவிட்-19 நோய் இருப்பது உறுதியாகி உள்ளது.
கொரோனா கிருமித் தொற்றுப் பரவலால் சாமானியர்கள் மட்டுமல்லாமல் உயர்பொறுப்பில் இருப்பவர்களும் பாதிக்கப்படுகிறார்கள்.
கிருமித் தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு முழுவீச்சில் செயல்பட்டு வருகிறார் சுகாதாரத்துறை செயலரான ராதாகிருஷ்ணன்.
இந்நிலையில் அவரது மனைவி கிருத்திகா, மகன் அரவிந்த், மாமனார் நடராஜன் மற்றும் மாமியார் என நான்கு பேருக்கு கிருமித் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நால்வரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தமது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள ராதாகிருஷ்ணன், தமக்கு பாதிப்பு ஏற்படவில்லை என உறுதி செய்துள்ளார்.
மேலும் நெருங்கிய உறவினர் மூலமாகவே தமது குடும்பத்தாருக்கு கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே கொவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டிருந்த தமிழக அமைச்சர்கள் தங்கமணி, கே.பி. அன்பழகன் ஆகிய இருவரும் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
இவ்விரு அமைச்சர்களும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கொரோனா விவகாரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்வுகளில் பங்கேற்றனர்.
இந்நிலையில் அன்பழகனுக்கு கடந்தமாத இறுதியில் காய்ச்சல் ஏற்பட்டது. எனவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதேபோல் அமைச்சர் தங்கமணியும் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
இந்நிலையில் இரு அமைச்சர்களும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

