சென்னை: கோழி மேய்ந்தது தொடர்பாக அண்டை வீட்டாரிடையே மூண்ட சண்டையில் ஒருவர் கொல்லப்பட்டதுடன், இச்சம்பவம் தொடர்பில் ஒரு தம்பதியர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை ஆவடியை அடுத்துள்ள திருமுல்லைவாயல் ஆரிக்கம்பேடு அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சசிகுமார். இவர் தனது மகனின் விருப்பத்துக்காக, மூன்று கோழிகளை கடந்த வாரம் வாங்கியுள்ளார்.
சம்பவத்தன்று அண்டை வீடான அன்பழகனின் வீட்டுக்குள் அந்தக் கோழிகள் சென்றதாகக் கூறப்படுகிறது. அதனையடுத்து, அன்பழகனின் மனைவி அழகுமீனா அந்தக் கோழிகளைக் கல்லால் அடித்து விரட்டினாராம்.
அதனைப் பார்த்த சசிகுமாரின் மனைவி துர்காதேவி, அழகு மீனா இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது மனைவிகளுக்கு ஆதரவாக சசிகுமாரும் அன்பழகனும் கோதாவில் குதித்தனர்.
தகராறு முற்றி கைகலப்பானதில், அன்பழகன் குடும்பத்தினர் சசிகுமாரைக் கீழே தள்ளியதாகக் கூறப்படுகிறது. இதில் தலையில் காயமுற்ற அவர் அசைவின்றிக் கிடந்துள்ளார். பின்னர் அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனையில் தெரிவிக்கப்பட்டது.
சசிகுமாரின் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு போலிசார் அனுப்பி வைத்தனர். சசிகுமாரை கொலை செய்த வழக்கில் அன்பழகனை போலிசார் கைது செய்தனர்.
எனினும் சசிகுமார் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் பின்னர் அன்பழகனின் மனைவி அழகுமீனாவும் கைதானார்.
இந்தச் சம்பவம் காரணமாக சென்னை ஆவடி பகுதியில் பரபரப்பு நிலவியது.

