சிவகங்கை: சிட்டுக்குருவிகள் கூடு கலைந்துவிடுமோ என்ற அச்சத்தில் மின் இணைப்புப் பெட்டியில், இருந்த கூட்டைக் கலைக்காமல், இருள் சூழ்ந்த தெருக்களையும் பொருட்படுத்தாமல் வாழ்ந்து வருகிறது ஒரு கிராமம்.
சிவகங்கை மாவட்டம் மறவமங்கலம் அருகே பொத்தகுடி கிராமத்தில் தெருவிளக்குகளுக்கான மின் இணைப்புப் பெட்டியில் குருவிக்கூடு கட்டி, முட்டையிட்டு அடைகாத்து வந்தது.
இதையறிந்த கிராமத்து மக்கள் குருவிக்கூட்டைப் பாதுகாப்பதுடன் குஞ்சுகள் பொறிக்கும் முன் அவை அங்கிருந்து சென்று விடாமல் காக்கத் தொடங்கினர்.
கிராமத்தில் உள்ள அனைத்துத் தெருவிளக்குகளுக்கும் ஒரே இணைப்புப் பெட்டி என்பதால், சுவிட்சை போட முடியாமல் கடந்த முப்பது நாட்களுக்கும் மேலாக தெரு விளக்குகள் எரியாமல் இருளில் வாழ்ந்து வருகிறார்கள் பொத்தகுடி கிராமத்தினர்.
சின்னஞ்சிறிய குருவிகள் கூடு கட்டினால் நல்ல சகுனம் என்றும் ஊருக்கும் மக்களுக்கும் நன்மை அதிகரித்து, அதிர்ஷ்டம் பிறக்கும் என்றும் கூறுகின்றனர் அக்கிராம மக்கள்.
சிட்டுக்குருவிகளைப் பார்ப்பதே அபூர்வமாகி வரும் இச்சூழலில் குருவியையும் குஞ்சுகளையும் காப்பாற்ற இந்த கிராமத்தினர் மேற்கொண்ட செயல் பலரது பாராட்டைப் பெற்று வருகின்றது.

