ரஜினி முடிவு: குருமூர்த்தி வேண்டுகோள்

ரஜினி முடிவு: குருமூர்த்தி வேண்டுகோள்

2 mins read
a78eb875-3277-4723-b8b4-6175f39aec11
-

சென்னை: முதல்வர் வேட்பாளர் தொடர்பாக ரஜினிகாந்த் வெளியிட்ட அறிவிப்பை மறுபரிசீலனை செய்யவேண்டும் என துக்ளக் பத்திரிகையின் ஆசிரியர் குருமூர்த்தி வலியுறுத்தி உள்ளார்.

துக்ளக் பத்திரிகையில் இடம்பெறும் கேள்வி, பதில் பகுதியில் வாசகர் ஒருவர் எழுப்பியுள்ள கேள்வி ஒன்றுக்கு அளித்த பதிலில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். துக்ளக் பத்திரிகையின் அண்மைய இதழில் ரஜினி தன் முடிவு குறித்து மறுசிந்தனை செய்யவேண்டும் என்று நீங்கள் (குருமூர்த்தி) மட்டும் கூறுவது எதைக் காட்டுகிறது என்பதே வாசகர் எழுப்பியிருந்த கேள்வி.

இதற்குப் பதிலளித்துள்ள குருமூர்த்தி, ரஜினிகாந்த் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டால்தான் தமிழகம் உருப்பட வாய்ப்புள்ளது என்றும் தாம் இதைக் குறிப்பிட்டே கருத்து வெளியிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தற்போதுள்ள அரசியல் சூழலில் ரஜினி இன்னொரு எம்ஜிஆராக உருவெடுப்பார் என குருமூர்த்தி ஏற்கெனவே கூறிஇருந்தார்.

ரஜினியின் அரசியல் பிரவேசத்தால் தமிழகத்தில் பெரும் மாற்றங்கள் ஏற்படும் என்றும் குருமூர்த்தி தெரிவித்திருந்த நிலையில், ரஜினிதான் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட வேண்டுமென மீண்டும் வலியுறுத்தி உள்ளார். இதற்கிடையே கந்த சஷ்டி கவசத்தைக் கொச்சைப்படுத்தியதற்கு ரஜினி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், சம்பந்தப்பட்டவர்கள் மீது தமிழக அரசு எடுத்த நடவடிக்கை பாராட்டுக்குரியது எனக் குறிப்பிட்டுள்ளார். "கந்த சஷ்டி கவசத்தை மிகக் கேவலமாக அவதூறு செய்து பல கோடி தமிழ் மக்களின் மனதைப் புண்படுத்தி கொந்தளிக்கச் செய்த இந்த ஈனச்செயலை, வாழ்க்கையில் மறக்க முடியாதபடி செய்தவர்கள் மீது துரிதமான நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட காணொளிப் பதிவுகளை நீக்கியதற்காக தமிழக அரசுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்," என்று ரஜினிகாந்த் தமது பதிவில் மேலும் தெரிவித்துள்ளார்