சென்னை: தமிழகத்தில் கொரோனா கிருமித் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,626ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் புதிதாக 4,965 பேருக்குக் கிருமி தொற்றியது உறுதியானது. மேலும் அன்றைய தினம் 75 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் தற்போது தினமும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொவிட்-19 பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.
அதேவேளையில் புதிதாக நோய்வாய்ப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
தற்போது மாநிலம் முழுவதும் சுமார் 1.80 லட்சம் பேர் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சுமார் 19.56 லட்சம் பேருக்கு கொவிட்-19 நோயைக் கண்டறிவதற்கான பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொவிட்-19 நோயிலிருந்து குணமடைவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது. நேற்று முன்தினம் ஒரேநாளில் சுமார் 5 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர்.
சென்னையில் மட்டும் 1,300 பேர் குணமடைந்திருப்பதாக அறிக்கையில் குறிப்பிட்டுள்ள சுகாதாரத் துறை, தமிழகத்தில் இதுவரை சுமார் 1.26 லட்சம் பேர் குணமடைந்துள்ளதாகவும் சுமார் 51 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளது.

