சென்னை: இந்திய அளவில் கொவிட்-19க்கான பரிசோதனையை மேற்கொள்வதில் சென்னை மாநகராட்சி முதலிடத்தில் இருப்பதாக அதன் ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாநகராட்சி சார்பில் இதுவரை 5.5 லட்சம் பரிசோதனைகளைச் செய்திருப்பதாகக் குறிப்பிட்டார்.
இப்போது நாள்தோறும் 15 ஆயிரம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் உரிய சிகிச்சையளித்தல், தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளால் சென்னையில் தொற்றுப் பரவல் விகிதம் குறைந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் சிகிச்சை பெற்று குணமடையும் விகிதம் 80 விழுக்காடாக அதிகரித்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், அவசர பயண அனுமதி பெற்று சென்னைக்குள் நுழைபவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவதாகத் தெரிவித்தார்.
"சென்னையில் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றாத அங்காடிகள், சந்தை வளாகத்தை மூட நடவடிக்கை எடுக்கப்படும். அங்காடிகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்திருப்பதையும் கிருமிநாசினியைப் பயன்படுத்துவதையும் உறுதி செய்யவேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது," என்றார் ஆணையர் பிரகாஷ்.

