சென்னை: அதிமுக-பாஜக இடையே திடீரென மூண்டுள்ள கருத்து மோதல் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இருதரப்புக்கும் இடையே காரசாரமான வார்த்தைப் போர் தொடங்கி உள்ளது.
எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் இவ்விரு கட்சிகளும் கூட்டணி அமைக்கும் என அரசியல் பார்வையாளர்கள் கணித்துள்ளனர்.
இந்நிலையில், அண்மையில் கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதில் மாநில அரசு உறுதியாக இருக்கவேண்டும் என வலியுறுத்தினார்.
இல்லையேல் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவால் வெற்றி பெற இயலாது என்றும் அவர் குறிப்பிட்டார். அவரது இக்கருத்து அதிமுக தலைமைக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார்.
அதிமுகவுக்கு மக்களின் ஆதரவு உள்ளது என்று குறிப்பிட்டுள்ள அவர், சி.பி. ராதாகிருஷ்ணனின் கருத்து மக்கள் மத்தியில் எடுபடாது என்றும் தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைப்பதை அவர் நேரில் காண்பார் என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் எம்பி அன்வர் ராஜா, பாஜக சார்பில் தெரிவிக்கப்பட்ட கருத்து அதிமுகவுடன் கூட்டணி வேண்டாம் என்பது போலத்தான் இருக்கிறது என்றார்.
அதிமுக உடன் கூட்டணி வைத்தால் சில கட்சிகளுக்கு லாபம் என்றும் இல்லையெனில் அவர்களுக்குத்தான் நஷ்டம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
"2016ஆம் ஆண்டு தேர்தலில் கூட்டணி இல்லாமல் அதிமுக வெற்றிபெற்றுள்ளது. சி.பி ராதாகிருஷ்ணன் மற்றும் பாஜக தலைவர் முருகன் சொல்லக்கூடிய கருத்து எவ்வளவு நியாயமானது? எவ்வளவு உள்நோக்கம் கொண்டது? என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்," என்றார் அன்வர் ராஜா.

