சென்னை: கண்தானம், உறுப்புதானம், ரத்த தானத்தில் முன்னணி வகிக்கும் தமிழக மக்கள், கொரோனா கிருமித்தொற்றை குணப்படுத்தும் பிளாஸ்மா தானம் செய்யவும் முன்வர வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் அழைப்பு விடுத்துள்ளார்.
நாட்டிலேயே டெல்லிக்கு அடுத்த படியாக சென்னை, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 2 கோடியே 34 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பிளாஸ்மா வங்கி தொடங்கப்பட்டுள்ளது.
இந்த வங்கியைத் தொடங்கி வைத்தபின் செய்தியாளர்களிடம் பேசிய விஜயபாஸ்கர், "கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை நல்ல பலன் அளிக்கிறது.
"கொரோனாவில் இருந்து குண மடைந்தோர் 14 நாட்களுக்கு பிறகு தைரியமாக பிளாஸ்மா தானம் அளிக்கலாம். உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு உள்ளிட்ட நோய் பாதித்தவர்கள் பிளாஸ்மா தானம் அளிக்க முடியாது.
"ராஜீவ்காந்தி மருத்துவமனை யைத் தொடர்ந்து, ஸ்டான்லி, ஓமந்தூரார், சேலம், திருச்சி, கோவை, நெல்லை அரசு மருத்துவமனைகளிலும் இந்த திட்டம் விரிவு படுத்தப்பட உள்ளது," என்று தெரிவித்தார்.
இதற்கிடையே, கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்த பரமக்குடி தொகுதி அதிமுக எம்எல்ஏ சதன் பிரபாகா் முதல் நபராக பிளாஸ்மா தானம் செய்தார்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவா்களின் ரத்தத்திலிருந்து பிளாஸ்மா அணுக்களை மட்டும் பிரித்தெடுத்து அதனைத் தேவைப்படும் நோயாளிகளுக்கு செலுத்தி சிகிச்சை அளித்து வருகின்றனர்.

