சென்னை: தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 6,472 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று பரவியிருப்பது உறுதியானது. இது இதுவரை இல்லாத புதிய உச்ச அளவு என்றும் கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் மாநிலத்தில் நோய்த் தொற்றுக்கு ஆளானோரின் எண்ணிக்கை 192,964ஆக அதிகரித்துள்ளது.
உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,232ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து சுகாதாரத் துறை சாா்பில் வெளியிடப் பட்டுள்ள அறிக்கையில், "மாநிலத்தில் இதுவரை மொத்தம் 21.57 லட்சம் மாதிரிகள் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்டுள்ளன. இவர்களில் 192,964 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவா்களில் பலரும் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனா்.
136,000 போ் குணம்
இத்தொற்றிலிருந்து மேலும் 5,210 போ் குணமடைந்துள்ளனா். இதன்மூலம் இதுவரை குணமடைந்து வீடு திரும்பி யோரின் எண்ணிக்கை 136,793 ஆக அதிகரித்துள் ளது. இதுவரை 70.89% பேர் குணமடைந்துள்ளனர்.
பரிசோதனைகள் அதிகரிப்பு:
நேற்று முன்தினம் மட்டும் 60,375 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நோய் பாதிப்பைக் கண்டறிய பரவலாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

