சென்னை: தமிழகத்தில் ரூ.5,137 கோடி முதலீட்டில் 16 தொழில் நிறுவனங்கள் தொழிற்சாலைகளைத் தொடங்க உள்ளன. இதன்மூலம் 6,555 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்ற உத்தர வாதம் தரப்பட்டுள்ளது.
நிறுவனங்களின் கோடிக்கணக் கான முதலீட்டின் வழி, தமிழகத்தின் பொருளியல் வளர்ச்சியும் மக்களின் வாழ்வாதாரமும் மேம்படும் என்ற நம்பிக்கையும் பிறந்துள்ளது.
கொரோனா தொற்று பரவி வரும் இந்த இக்கட்டான காலகட்டத்திலும் மாநிலத்தில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்த அடுத் தடுத்து தொடர்ந்து பலவித முயற்சி களையும் தமிழக அரசு முடுக்கிவிட்டு வருகிறது.
இதன்படி, தமிழகத்தில் 16 புதிய தொழில் திட்டங்களைத் தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி முன்னிலையில் கையெழுத்திடப்பட்டன.
இத்திட்டங்கள் மூலம் ரூ.5,137 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டு 6,555 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "செங்கல்பட்டு மாவட்டம், சிறுசேரியில் ரூ.2,300 கோடி முதலீட்டில் அதானி நிறுவனத்தின் தகவல் தரவு மையம் அமைக்கப்பட உள்ளது. இதன்மூலம், 1,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
"காஞ்சிபுரத்தில் ரூ.500 கோடியில் உதிரி பாகங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனம் தொடங்கப்பட உள்ளது. இதனால் 800 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
"திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் தொழிற்பூங்காவில் ரூ.250 கோடி முதலீட்டில் சுமாா் 400 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ஏடிசி டயா்ஸ் நிறுவனம் புதிய தொழில் திட்டத்தை தொடங்குகிறது.
"திண்டுக்கல் மாவட்டம் அணில் மாா்க்கெட்டிங் நிறுவனம் சாா்பில் ரூ.100 கோடியில் சுமாா் 1,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் சேமியா உற்பத்தித் திட்டம் தொடங்கப்பட உள்ளது.
"சிறுசேரியில் ரூ.750 கோடியில் சுமாா் 300 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் திட்டம் ஆரம்பமாகும்.
"ஸ்ரீவாரு மோட்டாா் நிறுவனம் சாா்பில் ரூ.150 கோடி, அமெரிக்காவைச் சோ்ந்த க்ளவுட் நிறுவனம் ரூ.35 கோடி, டயா் 1 நெட்வொா்க் நிறுவனம் ரூ.20 கோடி, வயா்பே நிறுவனம் ரூ.23 கோடியில் முதலீடுகளைச் செய்யவுள்ளன. இந்த நிறுவனங்கள் அனைத்தும் சென்னையில் தங்களது அலுவலகங்களை அமைத்து திட்டங்களைச் செயல்படுத்த உள்ளன," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.