சென்னை: தமிழகத்தில் டெங்கி காய்ச்சல் பரவத் தொடங்கி இருப்பதாக வெளியான தகவலையடுத்து அரசுத் தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அரசு உத்தரவுகளைப் பின்பற்றாதவர்கள் மீது நடவடிக்கை பாயும் என சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.
ஏற்கெனவே தமிழகத்தை கொரோனா கிருமித் தொற்று ஆட்டுவித்து வரும் நிலையில் டெங்கி காய்ச்சலும் இப்போது தலைதூக்கி உள்ளது. கிருமித்தொற்று பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக சென்னையில் உள்ள வணிக வளாகங்களையும் பெரிய கடைகளையும் மூடவேண்டும் என மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து டெங்கி காய்ச்சல் பரவலைத் தடுக்கும் வகையிலும் சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அதன் ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
மாநகராட்சிப் பணியாளர்கள் சென்னையில் வீடு வீடாகச் சென்று தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் அச்சமயம் வீட்டில் உள்ளவர்களிடம் வீட்டைச் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்துக்கொள்ளும்படி அறிவுறுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
"சுகாதாரம் இல்லாத கட்டடங்கள், காலி இடங்களின் உரிமையாளர்களுக்கு டெங்கி விழிப்புணர்வு குறித்து முதலில் நோட்டீஸ் வழங்கப்படும். அதன்பிறகும் அதே நிலை நீடித்தால் அபராதம் விதிக்கப்படும்.
"இறுதியாக முறையான சுகாதார ஏற்பாடுகள் இல்லாத இடங்கள் மாநகராட்சிக்குச் சொந்தமானவை என்று அறிவிப்புப் பலகை வைக்கப்படும்," என்றார் ஆணையர்.
இதற்கிடையே தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகள், அலுவலகங்கள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட இடங்களிலும் குடிசைப் பகுதிகளிலும் கொசு உற்பத்தியைத் தடுக்க கிருமி நாசினியும் கொசு மருந்தும் அடிக்கும் பணி தொடங்கியுள்ளது.

