கோவை: நள்ளிரவில் அரை நிர்வாணமாகச் சுற்றித் திரிந்தவர்களால் கோவையில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தக் காட்சி கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி உள்ளது. அந்த மர்ம நபர்கள் தலைக்கவசம் அணிந்திருந்ததால் அடையாளம் காண முடியவில்லை.
கோவை நகரின் பல்வேறு பகுதிகளில் சில தினங்களாக தலைக்கவசம் அணிந்து, அரை நிர்வாணக் கோலத்தில் சுற்றும் மர்ம நபர்களால் பொது மக்கள் மத்தியில் கடும் பீதி நிலவி வருகிறது.
மர்ம நபர்கள் வேட்டி அணிந்திருப்பதுடன் கையில் பயங்கர ஆயுதங்களையும் ஏந்தியுள்ளனர்.
கடந்த 23ஆம் தேதி இருகூர் தீபம் நகரில் அதிகாலை சுமார் மூன்று மணி அளவில் மர்ம நபர்கள் சுற்றித் திரிவது அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி உள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு கோவையில் உள்ள சிங்கா நல்லூர் பகுதியில் இதேபோல் ஆயுதங்களுடன் வந்த மர்மக் கும்பல் ஒன்று அங்கிருந்த சந்தன மரங்களை வெட்டிக் கடத்தியது குறிப்பிடத்தக்கது.

