நீலகிரி: 60 வயது பெண்மணியால் உதகையில் 200 பேருக்கு கொரோனா கிருமித் தொற்று பரவி உள்ளது.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட அப்பெண்மணி உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ளது ஒரநள்ளி கிராமம். இங்கு படுகர் இன மக்கள் அதிகளவில் வசிக்கின்றனர்.
கடந்த இரு வாரங்களுக்கு முன்பு இங்கு திருமண நிகழ்வு ஒன்று நடைபெற்றது.
ஊரடங்குக் கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையிலும் இந்தத் திருமண நிகழ்வில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டதாகத் தெரிகிறது.
கோவையைச் சேர்ந்த 60 வயது பெண்மணி ஒருவரும் திருமணத்திற்கு வந்திருந்தார். அதற்கு முன்பே அவருக்கு கொரோனா கிருமித்தொற்று இருந்ததாகக் கூறப்படுகிறது.
காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகளுடன் நீலகிரி வந்து சேர்ந்த அவருக்கு சுகாதாரத் துறையினர் கிருமித் தொற்றுக்கான பரிசோதனை மேற்கொண்டனர். மேலும் அவரது ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.
எனினும் சோதனை முடிவு தெரிவதற்கு முன்பே அப்பெண்மணி திருமண நிகழ்வில் கலந்துகொண்டார். தனக்கு நடத்தப்பட்ட சோதனை குறித்தும் அவர் யாரிடமும் விவரம் தெரிவிக்கவில்லை.
மேலும் துக்க நிகழ்வு ஒன்றிலும் அவர் கலந்து கொண்டுள்ளார். இவ்வாறு மறைத்ததன் பலனாக அவர் மூலம் 200 பேர் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சுகாதாரத் துறையினர் அப்பெண்மணியைத் தேடிக் கண்டுபிடித்து மருத்துவமனையில் சேர்த்தனர்.
மேலும் அவருடன் தொடர்பில் இருந்தவர்களைத் தேடிப்பிடிக்கும் நடவடிக்கையும் உடனடியாகத் துவங்கப்பட்டது.
அவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் இதுவரை சுமார் 200 பேருக்கு கிருமி தொற்றியது உறுதியாகி உள்ளது. இதில் பெரும்பாலானவர்கள் ஒரநள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். இதனால் அந்தக் கிராமமே பீதியில் உறைந்து போயுள்ளது.
இதற்கிடையே திருமண, துக்க நிகழ்வுகளில் கலந்துகொண்ட பலர் அருகில் உள்ள 8 கிராமங்களுக்குச் சென்று வந்தது தெரியவந்திருக்கிறது. இதனால் மேலும் சிலருக்கு கிருமி தொற்றியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
நீலகிரியில் கொரோனா கிருமித் தொற்றுப் பரவலைத் தடுக்க அம்மாவட்ட ஆட்சியர் பல்வேறு நடவடிக்கைகளை உடனுக்குடன் மேற்கொண்டு வந்தார். அதன் பலனாக அம்மாவட்டத்தில் கிருமித் தொற்று வெகுவாகக் கட்டுப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் ஒரே ஒரு பெண்மணியின் அலட்சியப் போக்கால் அந்த 200 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

