சென்னை: ஊரடங்கு நீடித்து வருவதால் தமிழகத்தில் விமான பயணம் மேற்கொள்ளும் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து சரிந்து வருகிறது. நேற்று முன்தினம் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் சென்னை விமான நிலையம் வெறிச்சோடிக் காணப்பட்டது.
நடப்பு ஜூலை மாதத்தின் நான்காவது ஞாயிற்றுக்கிழமை என்பதால் நேற்று முன்தினம் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இதனால் சென்னை உள்ளிட்ட அனைத்து முக்கிய நகரங்களிலும் போக்குவரத்து முடங்கியது. முக்கிய சாலைகளில் வாகனங்களை அறவே காண முடியவில்லை.
சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்தில் சுமார் 6 ஆயிரத்துக்கும் அதிகமான பயணிகள் தினமும் காணப்படுவர். ஆனால் ஞாயிற்றுக்கிழமையன்று சுமார் 4,600 பயணிகள் மட்டுமே பயணம் மேற்கொண்டனர்.
சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு 29 விமானங்கள் இயக்கப்பட்டன. இதில் சுமார் 2 ஆயிரம் பேர் மட்டுமே பயணம் செய்ததாகத் தெரிகிறது.
இதேபோல் பிற நகரங்களில் இருந்து சென்னை வந்தடைந்த 29 விமானங்களில் சுமார் 2,600 பேர் மட்டுமே பயணம் செய்தனர்.
இதனால் பயணிகள் கூட்டம் இன்றி விமான நிலையமும் வெறிச்சோடிக் காணப்பட்டது.
இதற்கிடையே சிங்கப்பூர், உக்ரைன், இலங்கை ஆகிய மூன்று நாடுகளில் இருந்து 351 பேர் சிறப்பு விமானங்கள் மூலம் சென்னை வந்தடைந்தனர்.
கொரோனா ஊரடங்கு காரணமாக பல்வேறு நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை தாயகம் அழைத்து வர மத்திய அரசின் ஏற்பாட்டில் சிறப்பு விமானங்கள் இயக்கப்படுகின்றன. இத்திட்டத்துக்கு வந்தே பாரத் எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சிங்கப்பூரில் இருந்து ஐந்து குழந்தைகள், 37 பெண்கள் உட்பட 177 பேர் சென்னை திரும்பினர்.
இதேபோல் உக்ரைனில் இருந்து 150 பேரும், இலங்கையில் இருந்து 24 பேரும் சென்னை திரும்பியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

