மதுரை: பெற்ற தாயின் கண்முன்னே இரு மகன்கள் வெட்டிக்கொலை

மதுரை: பெற்ற தாயின் கண்முன்னே இரு மகன்கள் வெட்டிக்கொலை

2 mins read
1d5b1138-36f9-405a-9804-eecbf00add05
பழிக்குப்பழி, வெட்டுக்குத்து, கொலை, கொள்ளை என வன்முறை கலாசாரத்தைக் கொண்ட நகரமாக மாறி வருகிறது மதுரை மாநகரம். கடந்த 15-07-2020 முதல் 26-07-2020 வரை 7 கொலைகள் நடந்துள்ளன. கோப்புப்படம்: ஊடகம் -

மதுரை: பெற்ற தாயின் கண்முன்னே இரு மகன்கள் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் காரணமாக மதுரை எல்லீஸ் நகரில் பதற்றம் நிலவி வருகிறது.

சகோதரர்களான 45 வயதான முருகன், 40 வயதான செந்தில் இருவரும் அப்பகுதியில் ரவுடிகளாக வலம் வந்தனர். இவர்கள் மீது கொலை, கொள்ளை உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளன.

இதனால் இருவரது மனைவிமார்களும் பிரிந்து சென்றுவிட்டனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை தங்கள் வீட்டிற்கு வெளியே அமர்ந்து இருவரும் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென பத்து பேர் கொண்ட கும்பல் அங்கு வந்து சேர்ந்தது.

பின்னர் சற்றும் எதிர்பாராத வகையில் அக்கும்பலைச் சேர்ந்தவர்கள் இருவரையும் சரமாரியாக வெட்டிச் சாய்த்தனர்.

இருவரது தாய் மற்றும் அப்பகுதி மக்கள் முன்னிலையில் இச்சம்பவம் நிகழ்ந்தது.

ரத்த வெள்ளத்தில் சாய்ந்த ரவுடிகளின் தலையில் அங்கிருந்த பெரிய கற்களைத் தூக்கிப் போட்டுவிட்டு கொலையாளிகள் தப்பிச் சென்றனர்.

மதுரையில் ஜூலை 15 முதல் 26 வரை அடுத்தடுத்து 7 கொலைகள் நடந்துள்ளது.பழிக்குப்பழி, ரத்தத்திற்கு ரத்தம் என மதுரையில் கொலைகள் நடப்பது சர்வசாதாரணமாகி விட்டது.

ஜூலை 15ல் செல்லுார் போஸ் வீதியில் வீட்டில் துாங்கிக்கொண்டிருந்த கொத்தனார் ராஜ்கிரண் 26, கொலை செய்யப்பட்டார். ஜூலை 16ல் பைபாஸ் ரோடு நேரு நகரில் நகை, பணத்திற்காக பஞ்சர்வணம் 65, கொலை செய்யப்பட்டார். ஜூலை 17ல் சிக்கந்தர் சாவடி அருகே மோட்டார் சைக்கிளில் வந்த விக்னேஷ் 24, வெட்டிக்கொல்லப்பட்டார். ஜூலை 21ல் அனுப்பானடி உப்புகார மேட்டில் ஒருவர் கொல்லப்பட்டார். இப்படியே தொடர்ந்து மதுரையின் பல இடங்களில் வெட்டுக்குத்து, கொலை என வன்முறை தலைவிரித்தாடுகிறது.