சென்னை: தமிழகத்தில் கொரோனா கிருமித்தொற்றுக்குப் பலியானோர் எண்ணிக்கை 3,500ஐ நெருங்கிஉள்ளது.
நேற்று முன்தினம் ஒரே நாளில் 85 பேர் பலியானதாகவும் அவர்களில் பச்சிளம் குழந்தையும் 15 வயதுச் சிறுமியும் அடங்குவர் என்றும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மாநிலம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் சுமார் 62 ஆயிரம் பேருக்கு கொரோனா கிருமித்தொற்றை கண்டறிவதற்கான பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
இவர்களில் 6,986 பேருக்கு கிருமி தொற்றியது உறுதியானது.
அதிகபட்சமாக சென்னையில் 1,155 பேரும், செங்கல்பட்டில் 501 பேரும், திருவள்ளூரில் 480 பேரும், குறைந்தபட்சமாக கரூரில் 12 பேரும், நாமக்கலில் 9 பேரும் புதிதாகப் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
தமிழகத்தில் இதுவரை 22.62 லட்சம் பேருக்கு கொவிட்-19 நோய் கண்டறியும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது என்றும் இவர்களில் சுமார் 2.13 லட்சம் பேருக்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதாகவும் சுகாதாரத்துறையின் அறிக்கை தெரிவிக்கிறது.
மொத்த எண்ணிக்கையில் 12 வயதுக்குட்பட்ட 10,691 குழந்தைகளும் 60 வயதுக்கு மேற்பட்ட சுமார் 26 முதியவர்களும் அடங்குவர்.
இதுவரை 3,494 பேர் உயிரிழந்திருப்பது தெரிய வந்துள்ளது. அதேவேளையில் மாநிலத்தில் சுமார் 1.56 லட்சம் பேர் கொவிட்19 நோயிலிருந்து குணமடைந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

