சென்னை: தமிழகத்தில் கொவிட்-19 கிருமித்தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே இருக்கிறது. இதனால், இம்மாத இறுதி வரை அறிவிக்கப்பட்டுள்ள பொது முடக்கம் இன்னும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்படலாம் எனப் பேச்சு அடிபடுகிறது.
இந்த நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொளி வாயிலாக இன்று மாவட்ட ஆட்சியர்களுடனும் நாளை மருத்துவர்கள் குழுவுடனும் ஆலோசனை நடத்தவுள்ளார். அப்போது, தற்போது தமிழகத்தில் மாவட்டவாரியாக கொரோனா பரவல் நிலை, தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு, ஊரடங்கு தளர்வுகள் குறித்து முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒவ்வொரு முறையும் மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்திய பின்னரே ஊரடங்கு நீட்டிப்பு குறித்து தமிழக அரசு முடிவெடுத்து வருகிறது.
3,500 பேருக்கு மேல் உயிரிழப்பு
இதனிடையே, தமிழகத்தில் புதிதாக 6,993 பேரை கொரோனா தொற்றி இருப்பதாக நேற்று தெரிவிக்கப்பட்டது. வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் திரும்பியவர்களில் மேலும் 37 பேருக்கு கிருமித்தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 220,716ஆக உயர்ந்தது.
இதுவரை 162,249 பேர் தொற்றில் இருந்து மீண்டுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இன்னும் 54,896 பேருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கொரோனா தொற்று காரணமாக நேற்று முன்தினம் மட்டும் 77 பேர் மாண்டதை அடுத்து, உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,571ஆக அதிகரித்தது.
வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு கட்டாயப் பரிசோதனை
இதனிடையே, சொந்த ஊருக்குத் திரும்பிய வெளிமாநிலத் தொழிலாளர்களை மீண்டும் தமிழகத்திற்கு அழைத்து வருவதற்கான வழிகாட்டி நெறிமுறைகளைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
கொரோனா தொற்றால் தமிழகத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் ஏறத்தாழ 300,000க்கும் மேற்பட்ட வெளிமாநிலத் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்குக் கிளம்பிச் சென்றனர்.
இந்நிலையில், அவர்களை மீண்டும் தமிழகத்திற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழக அரசுக்கு தொழில் நிறுவனங்கள் கோரிக்கை விடுத்து வந்தன.
இதையடுத்து, வெளிமாநிலத் தொழிலாளர்களுக்குக் கட்டாய கொரோனா பரிசோதனை உள்ளிட்ட வழிகாட்டி நெறிமுறைகள் அடங்கிய அரசாணையைத் தமிழக தொழிலாளர் துறை வெளியிட்டு இருக்கிறது.

