சென்னை: தமிழகத்தில் வெளி மாநிலத் தொழிலாளர்கள் மீண்டும் முன்புபோலவே வந்து பணியாற்று வதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதற்கான வழிகாட்டி நெறிமுறைகளும் வெளியிடப்பட்டு உள்ளன.
கொரோனா கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் உள்ளது.
இதையடுத்து, தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்ட பலவும் முடங்கியதால் தங்களது வாழ்வாதாரத்தை இழந்த சுமார் 3 லட்சத்துக்கும் அதிகமான வெளிமாநிலத் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர் திரும்பினர்.
இந்நிலையில், தங்களது சொந்த மாநிலத்திலும் போதுமான வரு வாயை ஈட்ட முடியாமல் தவித்து வரும் ெவளிமாநிலத் தொழிலாளர் கள், மீண்டும் தமிழகம் வர விருப்பம் தெரிவித்து உள்ளனர்.
அதேவேளையில், தங்களிடம் வேலை பார்த்துவந்த வடமாநிலத் தொழிலாளர்களை மீண்டும் பணி யில் சேர்த்துக்கொள்ள தமிழக நிறுவனங்களும் அனுமதி கோரின.
இதைத்தொடர்ந்து, அவர்களைப் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பணியில் அமர்த்த தமிழக அரசு அனுமதி தந்துள்ளது.
தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கே.சண்முகம் வெளியிட்ட அரசாணையில், "தமிழகம் வரும் அனைத்து தொழிலாளர்களுக்கும் நிறுவனங்களின் சொந்த செலவில் கொரோனா பரிசோதனை செய்யப்பட வேண்டும். தொற்று உள்ளவர்களை மருத்துவமனையில் சேர்க்கவேண்டும். தொற்று இல்லாதவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்திய பின் வேலைக்கு அமர்த்தலாம். பணியிடத்தில் சோப் மூலம் கைகழுவுதல், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல் உள்ளிட்ட சுகாதார வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். ஒவ்வொரு நாளும் உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்," என்று கூறப்பட்டுள்ளது.
சென்னையில் பேருந்துகள் ஓட வாய்ப்பில்லை
சென்னை: தமிழகத்தில் சென்னை தவிர பிற பகுதிகளில் ஆகஸ்ட் 1 முதல் பொதுப் போக்குவரத்தைத் தொடங்குவதற்கு வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
நாளையுடன் ஆறாம் கட்ட ஊரடங்கு முடிவடைவதை அடுத்து ஆகஸ்ட் 1 முதல் இயல்பு நிலை திரும்புமா? அல்லது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீடிக்குமா? என்பது குறித்த எதிர்பார்ப்பு மக்களிடையே நிலவி வருகிறது.
இந்நிலையில், ஆகஸ்ட் 1 முதல் தமிழகத்தில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர மற்ற பகுதிகளுக்கு பொதுப் போக்குவரத்தைத் தொடங்குவதற்கு வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், சென்னையில் பேருந்துகள் ஓட வாய்ப்பில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

