தமிழ் நாட்டில் கொவிட்-19 கட்டுப்பாடுகள் தொடர்கின்றன

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா கிருமிப் பரவல் காரணமாக நடப்பில் இருந்து வரும் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் ஆகஸ்ட் 31 வரை தொடரும் என்று நேற்று தமிழக அரசு அறிவித்தது.

மாவட்டம் விட்டு மாவட்டம் செல்பவர்களும் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர்களும் கட்டாயம் இ-பாஸ் எனப்படும் அனுமதியைப் பெறவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் மாதத்தில் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என்று அரசாங்கம் நேற்று விடுத்த அறிவிப்பு தெரிவிக்கிறது.

கொவிட்-19 நடைமுறை கட்டுப்பாடுகள் தொடரும் என்றாலும் சில நிபந்தனைகள் தளர்த்தப்பட்டு இருக்கின்றன.

அதன்படி மளிகைக்கடைகள், காய்கறி கடைகள் போன்றவை அடுத்த மாதம் மாலை 6 மணிக்கு பதிலாக 7 மணி வரை செயல்படலாம். அத்தியாவசியமான, அத்தியாவசியம் அல்லாத எல்லா பொருட்களையும் இணையம் மூலம் பொதுமக்கள் வாங்கலாம் என்றும் அத்தகைய பொருட்களை வீடுகளுக்குக் கொண்டு கொடுப்பதற்குத் தடை இல்லை என்றும் அரசாங்கம் தெரிவித்து இருக்கிறது.

தங்கும் வசதியுடன் கூடிய ஹோட்டல்கள், வணிக வளாகங்கள், கடைத்தொகுதிகள், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், ஆய்வு நிலையங்கள் அனைத்தும் செயல்பட முடியாமல் தடை தொடரும்.

இணையம் வழி போதனையை ஊக்குவிக்கும்படி கல்வி நிறுவனங்களுக்கு வலியுறுத்தப்பட்டு இருக்கிறது.

மாநிலங்களுக்கு உள்ளேயும் மாநிலங்களுக்கு இடையேயும் அரசாங்க பேருந்து, தனியார் பேருந்து அனைத்துக்கும் விதிக்கப்பட்டு இருக்கும் தடை மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை நடப்பில் இருந்துவரும்.

கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக தமிழகத்தில் மார்ச் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு நடப்பில் இருந்து வருகிறது. அது பல்வேறு நிபந்தனை தளர்வுகளுடன் மொத்தம் ஐந்து முறை நீட்டிக்கப்பட்டு வந்துள்ளது.

பேரூராட்சி, நகராட்சி பகுதிகளில் வழிபாட்டுத் தலங்களைத் திறக்க இப்போது அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ரயில், விமானப் போக்குவரத்தைப் பொறுத்தவரையில் இப்போதைய நிலையே தொடரும். ஆகஸ்ட் 15 அன்று மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி சுதந்திர தினம் கொண்டாடப்படும்.

இதனிடையே, மாநிலத்தின் கொரோனா கிருமி பரவல் நிலவரம் பற்றி விளக்கிய முதல்வர் பழனிசாமி, அரசாங்கம் எடுத்து வரும் வேகமான நடவடிக்கைகளால் இந்தியாவிலேயே மரண அளவு குறைந்த மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதாகக் கூறினார்.

மரண விகிதம் 1.6% ஆக உள்ளது என்றும் அது நாட்டிலேயே மிகவும் குறைவு என்றும் முதல்வர் விளக்கம் அளித்தார்.

இதுவரையில் மாநிலத்தில் 2,536,660 பரிசோதனைகள் நடந்து இருக்கின்றன என்றார் அவர்.

இவ்வேளையில், தமிழ்நாட்டில் நேற்றுக் காலை நிலவரப்படி மொத்தம் 234,114 பேர் கொவிட்-19 காரணமாக பாதிக்கப்பட்டு இருந்தார்கள். மரண எண்ணிக்கை 3,741 ஆகக் கூடி இருந்தது.

சென்னையில் தொற்று குறைந்து வந்தாலும் இன்னமும் அங்கு குறிப்பிடத்தக்க அளவில் கிருமித்தொற்று இருப்பதாக அதிகாரிகள் கவலை தெரிவித்தனர்.

மாநிலத்தில் புதன்கிழமை மொத்தம் 5,927 பேர் குணமடைந்து வீடு திரும்பினர் என்றும் அவர்களையும் சேர்த்து 172,883 பேர் குணமடைந்து இருக்கிறார்கள் என்றும் அரசாங்க தகவல்கள் தெரிவித்தன.

மொத்தம் 57,490 பேர் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!