சென்னை: தமிழகத்தில் மழைக் காலம் வருவதற்கு முன்பாகவே பல பகுதிகளிலும் அதிக மழை பெய்து வருகிறது. இதனால் டெல்டா பகுதிகளில் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி நாசமாகிவிட்டன.
அதே வேளையில், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்ட நேரடி கொள்முதல் நிலையங்களில் மழையில் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் வீணாகிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே, வழக்கமாக வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் அதிக மழையைப் பெறும் தலைநகர் சென்னையில் இப்போது தென்மேற்குப் பருவமழை காலத்தில் 41% அதிக மழை பெய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அனைத்து மாநிலங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.
மழை காரணமாக பல இடங்களில் அதிக சேதம் ஏற்பட்டுள்ளது.
தமிழக-ஆந்திர எல்லையில் பத்ரபள்ளி அருகே மலைப்பாதையில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவால் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை ஒரு வாரத்திற்கு மூடப்படுவதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
ஏற்காட்டில் தொடர் மழை காரணமாக மலைக்கிராமச் சாலைகளில் ஆங்காங்கே பாறைகள் சரிந்தும், மரங்கள் முறிந்தும் விழுந்து கிடக்கின்றன.
சேலம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பல இடங்களிலும் சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரியவந்தது. ஆனாலும் மழை காரணமாக நீர்நிலைகளில் தண்ணீர் தேங்கத் தொடங்கி, ஆழ்துளைக் கிணறுகளில் நீர்மட்டம் சற்று உயர்ந்துள்ளதால் விவசாயிகள் நெல், கேழ்வரகு, சிறுதானியங்கள் விதைப்புப் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
திருவாரூர், தஞ்சாவூர் டெல்டா மாவட்டங்களில் ஆயிரமாயிரம் ஏக்கர் பரப்பளவில் முன்னதாகவே குறுவை சாகுபடி நடக்கிறது. இப்போது அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு நெல் மூட்டைகள் விற்பனைக்காக வந்துகொண்டிருக்கின்றன. விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டை மூட்டையாக வெளிப்புற இடங்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
மேற்கொண்டும் கொள்முதலுக்கு நெல் வந்துகொண்டு இருக்கிறது. இந்நிலையில், மழையில் ஏராளமான நெல் மூட்டைகள் சேதமாகிவிட்டதாகவும் அவற்றை உரிய நேரத்தில் கொள்முதல் செய்து, சேமிப்புக் கிடங்குகளுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்துகிறார்கள்.
அதோடு, அறுவடையை மழை வந்து கெடுத்துவிட்டது என்றும் 410 ஏக்கரில் அறுவடைக்குத் தயாரான குறுவை நெற்பயிர்கள் மூழ்கிக் கிடப்பதாகவும் இந்த மாவட்ட விவசாயிகள் கலலையுடன் தெரிவித்தனர்.

