சென்னை: பாஜக மேலிடத் தலைவர்களைச் சந்தித்த திமுக எம்எல்ஏ கு.க. செல்வம் அக்கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவருக்கு அனுப்பப்பட்டுள்ள நோட்டீசில் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து அவரை ஏன் நீக்கக்கூடாது என்று கேட்கப்பட்டுள்ளது.
மேலும் திமுக தலைமை நிலையச் செயலாளர், செயற்குழு உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்தும் கு.க.செல்வம் நீக்கப்படுவதாக அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி திமுக எம்எல்ஏவான செல்வம் அண்மையில் திடீரென டெல்லி சென்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவைச் சந்தித்துப் பேசினார். அப்போது தமிழக பாஜக தலைவர் முருகன், தமிழக பாஜக பொறுப்பாளர் முரளிதரராவ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதையடுத்து கு.க.செல்வம் பாஜகவில் இணைவார் என்று தகவல் பரவியது. எனினும் தமது தொகுதி நலன் தொடர்பாகவே பாஜக தலைவர்களைச் சந்தித்ததாகவும் அக்கட்சியில் தாம் இணையவில்லை என்றும் நேற்று முன்தினம் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது கு.க. செல்வம் தெரிவித்தார்.
இத்தகைய சூழ்நிலையில் அவரை கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளார் மு.க. ஸ்டாலின்.
திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட செயலராக பொறுப்பில் இருந்த ஜெ.அன்பழகன் எம்எல்ஏ அண்மையில் கொரோனா கிருமித்தொற்றால் காலமானார்.
இதனால் அப்பொறுப்பு தமக்கு வழங்கப்படும் என கு.க.செல்வம் எதிர்பார்த்தார் என்றும் கட்சித் தலைமையோ உதயநிதி ஸ்டாலின் ஆதரவாளர் ஒருவருக்கு அப்பொறுப்பை வழங்கியதாகவும் தெரிகிறது. இதனால் ஏற்பட்ட அதிருப்தியில் கு.க.செல்வம் இவ்வாறு செயல்பட்டதாகத் தமிழக ஊடகம் தெரிவித்துள்ளது.

