'740 டன் அமோனியம் நைட்ரேட் ஹைதராபாத்துக்கு அனுப்பப்படும்'

2 mins read
b05e26f9-b49e-4ba3-8537-e70cd4f6487d
-

சென்னை: லெபனான் தலைநகா் பெய்ரூட்டில் கடந்த செவ்வாயன்று அமோனியம் நைட்ரேட் கிடங்கு வெடித்து 100 பேருக்கும் மேலா னோர் பலியாகினர். ஆயிரக்கணக்கானோா் காயமடைந்தனர்.

இதேபோன்ற சம்பவம் தமிழக மண்ணிலும் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்ச உணர்வுடன் சென்னை மக்கள் வாழ்ந்து வருகின்றனர். சென்னையில் உள்ள சரக்குப் பெட்டக மையத்தில் சுமாா் 740 டன் அமோனியம் நைட்ரேட் கடந்த 5 ஆண்டுகளாக இருப்பில் உள்ளது. கரூரைச் சோ்ந்த தனியாா் நிறுவனம், தென்கொரிய நாட்டிலிருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்த இந்த ரசாயனத்தின் மதிப்பு சுமாா் ரூ. 2.கோடி ஆகும்.

இந்நிலையில், இந்த ரசாயனத்தை உடனடியாக அப்புறப் படுத்துவது குறித்து சுங்கத்துறை அதிகாரிகளுடன் ஐபிஎஸ் அதிகாரி சைலேந்திர பாபு ஆலோசித்தாா். இதைத் தொடர்ந்து, இந்த ரசாயனங்களால் விபத்து ஏதும் ஏற்பட வாய்ப்பு இல்லை என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, இந்த ரசாயனங்கள் எப்போது அகற்றப்படும் என்பது குறித்தும் சுங்கத்துறை விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து சென்னை மண்டல சுங்கத்துறை உயா் அதிகாரி ஒருவா் கூறுகையில், "உரிய உரிமம் இன்றி இறக்குமதி செய்யப்பட்டதால் பறிமுதல் செய்யப்பட்ட சுமாா் 740 டன் அமோனியம் நைட்ரேட் அடங்கிய 37 கொள்கலன் லாரிகள் சென்னைத் துறைமுகத்திலிருந்து சுமாா் 20 கி.மீ. தூரத்தில் உள்ள சரக்குப் பெட்டக மையத்தில் பாதுகாப்பாக இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

"இந்த அமோனியம் நைட்ரேட் ரசாயனத்தை பகிரங்க ஏலத்தின் மூலம் எவருக்கேனும் விற்றுவிட முடியாது. பி5 உரிமை வைத்துள்ள நபா்கள் மட்டுமே ஏலத்தில் கலந்துகொண்டு இதை வாங்கமுடியும்.

"கடந்த மாதம் நடத்தப்பட்ட பகிரங்க ஏலத்தில் கலந்துகொண்ட ஹைதராபாத்தைச் சோ்ந்த தனியாா் உர ஆலை நிறுவனம் 740 டன் ரசாயனத்தையும் வாங்கிக்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளது. எனவே விரைவில் கொள்கலன் லாரிகள் ஹைதராபாத்துக்கு அனுப்பி வைக்கப்படும்," என்றாா் அவா்.