சென்னை: சென்னை மணலியில் சுங்கத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 740 டன் அம்மோனியம் நைட்ரேட் ரசாயனத்தை உடனடியாக அப்புறப்படுத்தும்படி மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 5 ஆண்டுகளாக 740 டன் ரசாயனம் சென்னையில் உள்ள சரக்குப் பெட்டக மையத்தின் இருப்பில் இருந்து வருகிறது.
கரூரைச் சோ்ந்த தனியாா் நிறுவனம், தென்கொரிய நாட்டில் இருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்த இந்த ரசாயனத்தின் மதிப்பு சுமாா் ரூ. 2.கோடி என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்த ரசாயனத்தை உடனடியாக அப்புறப் படுத்துவது குறித்து சுங்கத்துறை அதிகாரிகளுடன் ஐபிஎஸ் அதி காரி சைலேந்திர பாபு ஆலோசனை நடத்தினாா்.
அப்போது, ரசாயனத்தால் விபத்து ஏற்படும் வாய்ப்பு இல்லை என சுங்கத்துறை கூறியது.
சுங்கத்துறை தனது அறிக்கையில், 2 கிலோ மீட்டர் சுற்றளவில் வீடுகள் இல்லை என கூறியுள்ளதாகவும் ஆனால், அம்மோனியம் நைட்ரேட் வைக்கப்பட்டுள்ள இடத்தைச் சுற்றி 12,000 வீடுகள் உள்ளதாகவும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கூறியுள்ளது. 700 மீட்டர் தூரத்தில் 7,000 குடியிருப்புகளும் 1,500 மீட்டர் தொலைவில் 5,000 குடியிருப்புகளும் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, உடனடியாக ரசாயனத்தை அப்புறப்படுத்துமாறு சுங்கத்துறை ஆணையருக்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது.

