தமிழகத்தில் மேலும் இரண்டு அதிமுக எம்எல்ஏக்களுக்கு கிருமித்தொற்று

தமிழகத்தில் மேலும் இரண்டு அதிமுக எம்எல்ஏக்களுக்கு கிருமித்தொற்று

1 mins read
6ffde50d-3eea-47de-81ce-563e1b04fc4e
மதுரை சோழவந்தான் தொகுதி எம்எல்ஏ மாணிக்கத்துக்கும் மண்ணச்சநல்லூர் தொகுதி எம்எல்ஏ பரமேஸ்வரி முருகனுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. படம்: தமிழக ஊடகம் -

சென்னை: தமிழகத்தில் மேலும் இரண்டு எம்எல்ஏக்கள் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இருவரும் அதிமுக எம்எல்ஏக்கள். மதுரை சோழவந்தான் தொகுதி அதிமுக எம்எல்ஏ. மாணிக்கத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் சேர்க்கப்பட்டு உள்ளார்.

மண்ணச்சநல்லூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ பரமேஸ்வரி முருகனுக்கும் கிருமித்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

பழனி தொகுதி திமுக எம்எல்ஏ இ.பெ. செந்தில்குமாரும் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளார்.

கிருமிப் பரவலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுக சார்பில் நிவாரணம் வழங்குவதில் இவர் மும்முரமாக ஈடுபட்டார்.

இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக அவருக்கு திடீரென காய்ச்சல், சளி பாதிப்பு ஏற்பட்டது.

இதையடுத்து மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். பின்னர் திண்டுக்கல் சீலப்பாடியில் உள்ள தனது வீட்டில் அவர் தனிமைப்படுத்திக் கொண்டார்.

இதற்கிடையே அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் மதுரை தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்ந்து உள்ளார்.

தமிழகத்தில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என இதுவரை 20க்கும் மேற்பட்டோர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.