உயர்கல்வி படிப்போர் 50% ஆக அதிகரிப்பு

உயர்கல்வி படிப்போர் 50% ஆக அதிகரிப்பு

2 mins read
7b619a5c-9cc7-4657-a738-3f19eaae185e
தமிழக முதல்வர் பழனிசாமி. கோப்புப்படம் -

சென்னை: தமிழகத்தில் உயர்கல்வி பயில்வோர் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் 50% ஆக உயர்ந்திருக்கிறது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

கல்வி வளர்ச்சியில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என்றும் முதல்வர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா கிருமித் தடுப்புப் பணிகள் குறித்து ஆய்வு நடத்திய முதல்வர் பழனிசாமி, 15,016 பயனாளிகளுக்கு ரூ.33.31 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் பழனிசாமி, "கடந்த 2011ஆம் ஆண்டு தமிழகத்தில் உயர்கல்வி பயில்வோரின் எண்ணிக்கை 32% ஆக இருந்தது. கடந்த 10 ஆண்டுகளில் அரசு மேற்கொண்ட முயற்சியால் இப்போது அந்த அளவு 50% ஆக உயர்ந்துள்ளது,'' என்று குறிப்பிட்டார்.

கல்வியில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழகம் திகழ்வதால் தமிழர்கள் தலை நிமிரும் நிலை உள்ளது என்றும் அவர் கூறினார்.

முதல்வர் நான்கு துறைகளின் கீழ் ரூ.20.86 கோடி மதிப்பீட்டிலான 60 புதிய கட்டடப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

தொடர்ந்து ரூ.15.16 கோடி மதிப்பீட்டில் இடம்பெறும் 14 திட்டப் பணிகளை அவர் தொடங்கி வைத்தார். தன் தலைமையில் அரசு செயல்படுத்திவரும் சாதனைகளையும் திரு பழனிசாமி பெருமையுடன் பட்டியலிட்டார்.

கொரோனா கிருமித்தொற்றைப் பொறுத்தவரை, தனியார் மருத்துவமனைகளைக் காட்டிலும் அரசு மருத்துவமனைகளில் மேம்படுத்தப்பட்ட வசதிகள் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், தேவையான உபகரணங்கள் போதுமான அளவில் கையிருப்பில் உள்ளதாகவும் கூறினார்.

சிறு, குறு தொழில்களை மேம்படுத்த தமிழகத்தில் கொரோனா கடனுதவித் திட்டத்தின் கீழ் 219,217 நிறுவனங்களுக்கு ரூ.7,029 கோடி வழங்கப்பட்டுள்ளது என்றும் இது இந்திய அளவில் 10% என்றும் முதல்வர் தெரிவித்தார்.