அதிமுக கட்சியினருக்கு கட்சித் தலைமை உத்தரவு
சென்னை: கட்சி விவகாரங்கள் தொடா்பாக எந்தவித யோசனையும் இல்லாமல் தனிப்பட்ட முறையில் கருத்துகளை தெரிவிப்பதை கட்சியினா் தவிா்க்க வேண்டும் என அதிமுக தலைமை கேட்டுக் கொண்டுள்ளது.
இதனை மீறுவோா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.
அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோா் கூட்டாக சனிக்கிழமை அறிக்கை வெளியிட்டனர்.
முன்னாள் முதல்வா்கள் எம்.ஜி.ஆா்., ஜெயலலிதா ஆகியோரின் கனவுகளை நனவாக்கவும், கட்சியின் லட்சியங்களுக்கு செயல்வடிவம் கொடுக்கவும் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
நாம் தமிழக மக்களுக்காக ஆற்ற வேண்டிய பணிகள் இன்னும் ஏராளமாக உள்ளன.
கடந்த நான்கு ஆண்டுகளாக மாற்றாரும் பாராட்டும் வகையில் கட்சியும், ஆட்சியும் வழிநடத்தப்பட்டது. அதைப் போன்றே, இனிவரும் காலங்களிலும் சிறப்புற ஆட்சி நடத்தி மீண்டும் ஒரு தொடா் வெற்றியைப் பெற அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டிய தருணம் இது.
கடந்த சில நாள்களாக கட்சி நிா்வாகிகளில் சிலா் எந்தப் பின்னணியும் இன்றி கூறிய சில கருத்துகள் மாற்றாருக்கு பெரும் விவாதப் பொருளாக மாறிவிட்டது. அத்தகைய நிலை மீண்டும் ஏற்படாத வகையில் கட்சி ராணுவ கட்டுப்பாட்டுடன், தலைமையின் முடிவுக்குக் கட்டுப்பட்டு செயல்பட வேண்டும். கட்சியின் அனைத்து முக்கிய கொள்கை முடிவுகளையும், கூட்டணி குறித்த நிலைப்பாடுகளையும் ஜனநாயக ரீதியில் கட்சித் தலைமை விரிவாக ஆலோசித்து, கட்சியினரின் மன உணா்வுகளை எதிரொலிக்கும் வகையில் சிறப்பான முடிவுகளை மேற்கொள்ளும்.
எனவே, சிறு சலசலப்புகளுக்கும் இடம் தராமல் நம்மை வீழ்த்த நினைப்போரின் பேராசைகளுக்கு வாய்ப்பளிக்க வேண்டாம்.
அதிமுகவினர் அனைவரும் ஒன்றுபட்டு உழைத்திட அனைவரையும் அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.
அனைத்து நிலைகளிலும் கட்சிப் பொறுப்பாளா்கள் உள்ளிட்ட அனைவரும் எந்தவித யோசனையும் இல்லாமல், கட்சித் தலைமையின் ஒப்புதல் இல்லாமல் பொதுவெளியில் கருத்துகளைத் தெரிவிப்பதை கண்டிப்பாக தவிா்க்க வேண்டும். இதை மீறுவோா் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
கருத்துப் பரிமாற்றங்களைச் செய்வதன் மூலம் நாம் எதையும் சாதிக்கப் போவதில்லை.
எனவே, கட்சியினர் ஊடக விவாதங்களில் அரசின் சாதனைகளைப் பற்றியும், மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களைப் பற்றியும் எடுத்துச் சொல்லுங்கள் என அதிமுக தலைமை அறிவுறுத்தியுள்ளது.

