சென்னை: அதிமுகவில் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்கிற விவாதம் தொடர்ந்து வந்த நிலையில், நேற்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் (படம்) உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் 10 பேர் சென்னையிலுள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை அடுத்தடுத்து சந்தித்து ஆலோசனை நடத்திய நிகழ்வு பரபரப்பான சூழ்நிலையை உருவாக்கியது.
அதன்பின்பு முதல்வரும் துணை முதல்வரும் கூட்டறிக்கை வெளியிட்டு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த நிலையில், சனிக்கிழமை மதுரை திரும்பிய அமைச்சர் உதயகுமார், மதுரை மாவட்டம் திருமங்கலத்தில், தான் வகிக்கும் மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் என்கிற முறையில் புறநகர் மாவட்ட நிர்வாகிகளை அழைத்து அவசரத் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றினார். அதில் தென்மாவட்ட தொழில் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டும், தென்மாவட்டங்களில் அடிப்படைக் கட்டமைப்பை உயர்த்துவதற்கும் மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு இரண்டாவது தலைநகர் உருவாக்கப்படவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினார்.
மதுரையில் உயர்நீதிமன்றக் கிளை, அனைத்துலக விமான நிலையம், எய்ம்ஸ் மருத்துவமனை, 150 கிலோ மீட்டர் தூரத்தில் தூத்துக்குடி துறைமுகம் ஆகியவை அமையப்பெற்றுள்ள நிலையில், தலைநகருக்கு உரிய அனைத்துச் சிறப்புகளும் பெற்றுள்ளதால் முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் மதுரையை இரண்டாம் தலைநகராக அறிவிக்க வேண்டும் என அந்த தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ளார்.

