செய்திக்கொத்து (தமிழ் நாடு) 17-8-2020

செய்திக்கொத்து (தமிழ் நாடு) 17-8-2020

1 mins read

மன்னார்குடி: லாரி - வேன் மோதல்; 4 பேர் உயிரிழப்பு

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது வேன் மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர்.

திருச்சியிலிருந்து கறிக் கோழிகளை ஏற்றிக்கொண்டு ஒரு வேன் வெள்ளிக்கிழமை இரவு திருத்துறைப்பூண்டிக்கு வந்துகொண்டிருந்தது. மன்னார்குடி அருகே நெடுவாக்கோட்டை என்ற இடத்திற்கு வந்தபோது, சாலையோரத்தில் நின்றுகொண்டிருந்த லாரியின் மீது வேன் மோதியது. இந்த விபத்தில் கறிக் கோழிகளை ஏற்றி வந்த வேனில் இருந்த தாராபுரம் சந்திரசேகர்(40), ஆலங்குடி சி.வெங்கடாச்சலம்(45), அறந்தாங்கி ப.வெங்கடாச்சலம்(46), மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த ஷிபு மஜி(35) ஆகியோர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். லாரி ஓட்டுநரான ரமேஷ் காயங்களுடன் உயிர் தப்பினார்.

உயிரை மாய்க்கச் சென்றவரை காப்பாற்றிய அதிகாரிக்குப் பாராட்டு

பாளையங்கோட்டை: மேலப்பாளையம், கணேசபுரத்தில் சுதந்திரதினத்தன்று நீர்த்தேக்கத் தொட்டியின் உயரே இருந்து குதித்து தன் உயிரை மாய்த்துக்கொள்ள முற்பட்ட ஒருவரை கொஞ்சமும் தாமதிக்காமல் நொடிப்பொழுதில் பாய்ந்து மடக்கிப்பிடித்து நிறுத்தினார் தீயணைப்பு அதிகாரி ஒருவர். பாளையங்கோட்டை தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த வீரராஜ் என்ற அந்த அதிகாரியையும் அவரது குழுவினரையும் அவ்வூர் மக்களும் காவல்துறை உயர் அதிகாரிகளும் பெரிதும் பாராட்டினர்.