மதுரை: மதுரையில் பிச்சைக்காரர் ஒருவர், தான் பிச்சை எடுத்து சிறுக சிறுக சேமித்த பணத்தை பத்து பத்தாயிரமாக எட்டு முறை ரூ.80,000 பணத்தை கொரோனா நிதிக்கு அளித்த செய்தி அண்மையில் பரபரப்பாகப் பேசப்பட்டது.
பூல்பாண்டி என்றழைக்கப்படும் தயாள குணம் கொண்ட அந்த மனிதருக்கு மதுரையில் நடந்த இந்திய சுதந்திர தின விழா நிகழ்வில் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் சுதந்திர தினவிழா ஏற்பாடுகள் நடந்தபோது, கொரோனா தடுப்புப் பணியில் சிறப்பாகச் செயல்பட்ட தன்னார்வலர்களுக்கு விருது வழங்கும் பட்டியலில் 7 பேரை ஆட்சியர் டி.ஜி. வினய் தேர்வு செய்தார். அதில், ஐந்தாவது பெயராக யாசகர் பூல்பாண்டியின் பெயர் இடம் பெற்றிருந்தது அதிகாரிகளை ஆச்சரியம்அடைய வைத்தது.
இந்த விருதை வழங்கப் பூல்பாண்டியைக் கண்டுபிடித்து நேற்று நடந்த சுதந்திர தினவிழாவுக்கு அழைத்து வரும்படி அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார். ஆனால் அவரை கடந்த 2 நாட்களாகத் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. தனிக்குழு அமைத்து அதிகாரிகள் யாசகர் பூல்பாண்டியைத் தேடி வருகின்றனர்.
பூல்பாண்டி வீடு, குடும்பம் எதுவும் இன்றி ஊர் ஊராய் சுற்றித் திரியும் யாசகர் ஆவார். ஆரம்பத்தில் தூத்துக்குடியில் இருந்தபோது இதேபோல யாசகம் பெற்ற பணத்தைப் பள்ளிகளுக்கும், வறுமையில் வாடுபவர்களுக்கும் கொடுத்து உதவியுள்ளார். அவரது பொதுநலத்தை அறிந்த மக்களும், அவர் செல்லும் இடங்களில் எல்லாம் தாராளமாக யாசகம் வழங்கி ஊக்குவித்தனர். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, "மக்கள் வழங்கிய பணத்தை அவர்களுக்கே திரும்பிக் கொடுக்கிறேன். இதில் எனக்கு என்ன பெருமை இருக்கிறது. கொரோனா தொற்று முடியும் வரை யாசகம் பெற்ற பணத்தை நோய்த் தடுப்புப் பணிக்காக கொடுத்துக் கொண்டே இருப்பேன்," என்று கூறியுள்ளார் பூல்பாண்டி.

