இரண்டாவது தலைநகரம் 'பொருளியலை மேம்படுத்தும்'

இரண்டாவது தலைநகரம் 'பொருளியலை மேம்படுத்தும்'

2 mins read
c208e502-7040-4da5-808d-916480236e92
-

தமிழகத்திற்கு இரண்டாவதாக தலைநகரம் தேவைப்படுமா? தற்போதைய தலைநகர் சென்னையில் கூட்ட நெரிசல், தள்ளு முள்ளு, சுற்றுப்புற மாசு போன்ற பிரச்சினைகள் இந்தக் கேள்விக்கு வித்திடுகின்றன. மதுரையின் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக கட்சியினர், தமிழகத்தின் இரண்டாவது தலைநகரமாக மதுரை அறிவிக்கப்படவேண்டும் என உறுதியுடன் கோரி வருகின்றனர். இந்த நிலைப்பாட்டை முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் ஏற்கவேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

குஜராத் மாநிலத்திற்கு இரண்டு தலைநகரங்கள் இருப்பதாகவும் ஆந்திராவில் மூன்று தலைநகரங்கள் அமையப்போவதாகவும் மதுரை அதிமுகவினர், இது குறித்து வெளியிட்ட தங்களது தீர்மான அறிக்கையில் சுட்டினர்.

இந்த இயக்கத்திற்கு தமிழக அமைச்சரவையிலுள்ள ஆர். பி. உதயகுமாரும் செல்லூர் கே ராஜுவும் தங்களது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர். இருவருமே மதுரையைச் சேர்ந்தவர்கள். "மதுரை இரண்டாவது தலைநகராக அறிவிக்கப்பட்டால் தமிழகத்தின் தென்மாவட்டங்கள் வளரும். பொருளியல் வளர்ச்சி, தொழில் துறை மேம்பாடு, வேலைவாய்ப்பு ஆகியவற்றுக்கு இது வகைசெய்யும்," என்றார் திரு உதயகுமார்.

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் மதுரையை தமிழகத்தின் இரண்டாவது தலைநகராக்க விரும்பியதாகவும் திரு ராஜு தெரிவித்தார். "மறைந்த முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவும் தமது அரசியல் முடிவுகளை மதுரையில்தான் எடுத்தார்," என்றும் அவர் கூறிகிறார்.

1981ல் டாக்டர் எம்.ஜி.ஆர் சென்னைக்குப் பதிலாக திருச்சிராப்பள்ளியைத் தமிழகத்தின் தலைநகராக்கும் யோசனையை முன்வைத்தது குறிப்பிடத்தக்கது. சென்னையில் மாறி மாறி ஏற்படும் வறட்சியும் வெள்ளமும் தமது திட்டத்தின் காரணம் என டாக்டர் எம்.ஜி. ஆர் சுட்டியபோதும் அந்தத் திட்டம் இறுதியில் நடைமுறை ஆகவில்லை.