சென்னை: ஆளுங்கட்சி, எதிர்க்கட்சியைப் பின்பற்றியே பாஜகவும் தலைவர்களுக்கு பரிசு அளிக்கும் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளதாக பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதை அடுத்து, இத்தேர்தலில் பாஜக வேட்பாளரை வெற்றிபெற வைக்கும் மாவட்டத் தலைவர்களுக்கு இன்னோவா கார் பரிசு அளிக்கப்படும் என எல்.முருகன் அறிவித்துள்ளார்.
பாஜக மாநில நிர்வாகிகளிடம் காணொளிக் காட்சி மூலம் பேசிய எல்.முருகன், "வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் தடம் பதித்தே ஆகவேண்டும். இதற்காக கட்சியினர் கடினமாக உழைக்கவேண்டும். பாஜக வேட்பாளரை வெற்றிபெறச் செய்யும் மாவட்டத் தலைவர்களுக்கு இன்னோவா கார் பரிசாக வழங்கப்படும்," என்றார். இது பாஜகவினரிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், "தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி தொடரும். பாஜக கைகாட்டும் கட்சியால்மட்டுமே ஆட்சிக்கு வரமுடியும்," என்றார்.
இதற்கிடையே, நாகர்கோவிலில் பேட்டியளித்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், "பாஜகவை பொறுத்தவரை, வருகிற சட்டமன்றத் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றிபெறும். பாஜக அங்கம் வகிக்கும் ஆட்சிதான் தமிழகத்தில் உருவாகும்," என்றார்.

