சென்னை: கொரோனா கிருமிப் பரவல் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஒரு மாவட்டத்திலிருந்து இன்னொரு மாவட்டத்திற்குள் நுழையும் வாகனங்களுக்கு இ-பாஸ் முறை நடப்பில் உள்ளது. அதனைப் பெற கடுமையான விதிமுறைகள் இருந்தன.
அண்மையில் விதிமுறைகள் தளர்த்தப்பட்டு இ-பாஸ் பெறுவது எளிமை ஆக்கப்பட்டது. விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்பட்டு வருகிறது.
தளர்வின்றி இ-பாஸ் வழங்கும் முறை நடப்புக்கு வந்ததும் நேற்று முன்தினம் திங்கட்கிழமை மட்டும் ஒரு லட்சத்து 20 ஆயிரம் இ-பாஸ் வழங்கப்பட்டது.
இ-பாஸ் முறை நடப்புக்கு வந்த பின்னர் ஒரே நாளில் ஒரு லட்சத்துக் கும் அதிகமாக வழங்கப்பட்டது இதுவே முதல் முறை.
இதற்கு முன்னர், ஒரு நாளில் அதிகபட்சமாக கிட்டத்தட்ட 15,000 இ-பாஸ் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டதால் ஒவ்வொரு மாவட்டத்திற்குள்ளும் நுழையும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்தது. குறிப்பாக, சென்னை மாநகருக்குள் ஆயிரக்கணக்கான வாகனங்கள் புகுந்தன.
திங்கட்கிழமை மாலை 6 மணி நிலவரப்படி வெளிமாவட்டங்களில் இருந்து 19,000 வாகனங்கள் சென்னைக்குள் நுழைந்ததாக டைம்ஸ் ஆஃப் இந்தியா குறிப்பிட்டது.
பரனூர், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய இரு 'டோல்கேட்' வாயிலாக நுழைந்த வாகனங்களின் எண்ணிக்கை அவை. குறிப்பாக, பரனூர் டோல்கேட்டில் வாகன நெரிசல் ஏற்படும் அளவுக்கு ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றிருந்ததாக அச்செய்தி குறிப்பிட்டது. பல்லாயிரம் வாகனங்கள் நேற்றும் சென்னைக் குள் சென்றன.

