2வது தலைநகரம்; திருச்சி மதுரை போட்டா போட்டி

2வது தலைநகரம்; திருச்சி மதுரை போட்டா போட்டி

2 mins read
6b7f9317-6f0b-406c-b236-65a95bce55bd
அமைச்சர்கள் ஆர்.பி உதயகுமாரும் வெல்லமண்டி நடராஜனும் மாறுபட்ட கருத்தை வெளியிட்டுள்ளனர். படம்: தமிழக ஊடகம் -

சென்னை: திருச்சியை 2வது தலைநகரமாக அறிவிக்க வேண்டும் என்று ஒரு தரப்பினரும் மதுரையை 2வது தலைநகராக உருவாக்க வேண்டும் என்று மற்றொரு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இதில் மதுரையை 2வது தலைநகரமாக உருவாக்க அமைச்சர் ஆர்.பி உதயகுமார் மும்முரமாக செயல்பட்டு வருகிறார்.

இதன் தொடர்பில் மதுரையை இரண்டாவது தலைநகராக்க வேண்டும் என முதல்வரிடம் வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதற்கு அமைச்சர் செல்லூர் ராஜூம் ஆதரவு தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி துறைமுகம் அருகே இருப்பதாலும் தென்மாவட்டங்களில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தவும் மதுரை சரியான இடம் என்ற வாதத்தை மதுரை ஆதரவாளர்கள் முன்வைத்துள்ளனர்.

இந்த நிலையில் மதுரையில் இம்மாதம் 21ஆம் தேதி அமைச்சர் உதயகுமார் தலைமையில் தென்மாவட்ட தொழில் வர்த்தகர்களின் கலந்தாய்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொழில் வர்த்தக சங்கம் ஏற்பாடு செய்துள்ள கலந்தாய்வில் மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், விருது நகர், நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை மாவட்ட தொழில் வர்த்தகர்கள் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.

இதற்கிடையே 2வது தலை நகரமாக்க திருச்சி அனைத்து வளங்களையும் பெற்றுள்ளதாகவும் திருச்சியைத்தான் 2வது தலை நகராக அறிவிக்க வேண்டும் என்றும் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கோரிக்கை விடுத்துள் ளார்.

"திருச்சியை தமிழகத்தின் இரண்டாவது தலைநகராக்க வேண்டும் என்பது மறைந்த முதல்வர் எம்ஜிஆரின் கனவுத்திட்டம். எம்ஜிஆரின் கனவுத் திட்டத்தை நிறைவேற்றுவதே சரியானதாக இருக்கும். முதல்வரிடமும் துணை முதல் வரிடமும் மன்றாடி திருச்சியை 2வது தலைநகராக்க முயற்சி எடுப்போம்," என்றும் வெல்லமண்டி நடராஜன் கூறினார்.

2வது தலைநகரை அமைக்கும் விவகாரத்தில் அமைச்சர்களுக்கு இடையே மாறுபட்ட கருத்து நிலவுவதால் கொரோனாவுக்கு எதிராக தமிழக அரசு போர் தொடுத்துள்ள வேளையில் 2வது தலைநகரம் குறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்பு இல்லை என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அறிவித்துள்ளார்.