சென்னை: தமிழகத்தில் சென்ற ஆண்டும் இந்த ஆண்டும் நெல் விளைச்சல் அமோகமாக இருப்பதால் அரிசிக்குப் பஞ்சமே இல்லை என்ற நிலை உருவாகி உள்ளது.
வயல்களில் விளைந்து விவசாயிகள் மூட்டை மூட்டையாகக் கொண்டு வரும் நெல்லை வாங்கி சேமிப்புக் கிடங்குகளில் அரசாங்கம் இருப்பு வைத்துவருகிறது.
டெல்டா பகுதிகளில் அறுவடை செய்ய இயந்திரங்கள் கிடைக்காமல் விவசாயிகள் திண்டாடுகிறார்கள். பருவமழை பக்கத்து மாநிலங்களிலும் தமிழகத்திலும் அதிகம் பெய்வதே நல்ல விளைச்சலுக்குக் காரணம் என்று அரசும் விவசாயிகளும் கூறுகிறார்கள்.
விளைச்சல் ஒருபுறம் இருக்க, அரிசி அட்டை வைத்துள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் 45 முதல் 50 கிலோ அரிசி மாதாமாதம் இலவசமாக ரேஷன் கடைகளின் மூலம் அரசு வழங்கி வருகிறது.
இப்படி ரேஷன் அரிசியை இலவசமாகப் பெறும் நடுத்தர மக்கள் அதை வடமாநிலத் தொழிலாளருக்கு விற்று வந்தனர். ஆனால் கொவிட்-19 காரணமாக அந்தத் தொழிலாளர்கள் சொந்த ஊர் சென்றுவிட்டதால், இப்போது ேரஷன் அரிசியை விற்க முடியவில்லை. இச்சூழலில், ரேஷன் அரிசி ரூ. 10 விலைக்குக் கூவிகூவி சட்டவிரோதமாக விற்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
திருப்பூர் பகுதியில் ஒரு மளிகைக் கடைக்கு வெளியே சாலை ஓரமாக ரேஷன் அரிசி மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு வியாபாரம் நடந்ததைக் கண்டு வியந்து மக்கள் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர்.
அதையடுத்து சில இளைஞர்கள் அந்த அரிசி மூட்டைகளை வாகனங்களில் எடுத்துச் சென்று பதுக்கிவிட்டதாகக் கூறப்பட்டது.

