13 வயது சிறுவன், 104 வயது முதியவர் பலி; நாடு முழுவதும் 63,000 பேர் குணமடைந்தனர்
சென்னை: தமிழகத்தில் ஒரே நாளில் புதிதாக சுமார் 6 ஆயிரம் பேருக்குக் கொரோனா கிருமித் தொற்று ஏற்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் 13 வயது சிறுவன், 100 வயதான மூதாட்டி, 104 வயது முதியவர் உள்ளிட்ட பலர் கொவிட்-19 நோய்க்குப் பலியாகி உள்ளனர்.
தமிழகத்தில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 367,430 ஆக அதிகரித்துள்ளது. நேற்றுமுன்தினம் ஒரே நாளில் சுமார் 72 ஆயிரம் பேருக்கு கொவிட்-19 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதுவரை ஒட்டுமொத்தமாக 3.9 மில்லியன் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. கிருமித்தொற்றால் பலியானோரின் மொத்த எண்ணிக்கை 6,340 என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இதற்கிடையே மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரா தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. அங்கு பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 6.5 லட்சத்தைக் கடந்துள்ளது. இதுவரை 21,698 பேர் பலியாகி உள்ளனர்.
மேற்கு வங்கத்தில் பலி எண்ணிக்கை 2,689 ஆகவும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை1.32 லட்சமாகவும் உள்ளது. கர்நாடகாவில் 4,522 பேர் பலியாகி உள்ளனர். இதுவரை 264,546 பேர் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆந்திராவில் மொத்தம் 334,940 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 3,092 பேர் பலியாகி உள்ளனர்.
கேரளாவில் சுமார் 54 ஆயிரம் பேருக்கு கிருமி தொற்றியது. அவர்களில் இதுவரை சுமார் 35 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர். மரண எண்ணிக்கை 203 ஆக உள்ளது.
தெலுங்கானாவில் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது. 78 ஆயிரம் பேர் கொவிட்-19 பிடியிலிருந்து விடுபட்ட நிலையில், 744 பேர் இதுவரை பலியாகி உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

