சென்னை: தலைநகர் சென்னையில் மதுக்கடைகளைத் திறந்த பிறகு முதன்முறையாக மாநிலத்தில் டாஸ்மாக் ஒரு நாள் விற்பனை ரூ.250 கோடியைத் தாண்டிஉள்ளது.
கொவிட்-19 காரணமாக தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. அதன்பின் இரண்டு மாதங்கள் கழித்து சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் கடைகள் திறக்கப்பட்டன.
சென்னையில் தொற்று கட்டுக்குள் உள்ள நிலையில், 5 மாதங்களுக்குப் பிறகு மாநகரக் காவல் எல்லைக்குள் உள்ள 755 மதுபானக் கடைகளில் 720 கடைகள் திறக்கப்பட்டன.
முதல் நாள் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் குறைந்து காணப்பட்டபோதிலும், சென்னையில் மட்டும் 33 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சனிக்கிழமை ஒரு நாள் மட்டும் சென்னை உட்பட தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மது விற்பனை ரூ.250 கோடியைத் தாண்டியுள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவித்தன.

