சென்னை: சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் நேற்று நிகழ்ந்த தீ விபத்தில் மூன்று பேருந்துகள் கருகி சேதமடைந்தன.
தமிழகத்தில் கொரோனா கிருமித்தொற்றைத் தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக அரசு மற்றும் தனியார் பேருந்துச் சேவைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
இதனால், பேருந்துகள் பல மாதங்களாக ஓடாமல் பேருந்து நிலையங்களில் நிறுத்தப்பட்டு உள்ளன. இப்படி நிறுத்தப்பட்டு இருந்த சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் நேற்று திடீரென்று தீ மூண்டது.
அதில் மூன்று பேருந்துகள் கருகின. நீண்ட நாட்களாக ஓடாமல் நிறுத்திவைக்கப்பட்ட பேருந்துகளைப் பராமரிக்காமல் விட்டதால் தீ விபத்து நிகழ்ந்துள்ளதா என்பது பற்றி அதிகாரிகள் விசாரணை நடத்துவதாகத் தெரிவிக்கப்பட்டது.

