அமராவதி: ஆந்திராவில் துணை மின் நிலையத்தில் நிகழ்ந்த தீ விபத்தில் சிக்கியவர்கள் உயிரிழப்பதற்கு முன் தங்கள் குடும்பத்தாருடன் பேசியது தொடர்பான உருக்கமான தகவல்கள் தெரியவந்துள்ளன.
ஸ்ரீசைலம் பகுதியில் அமைந்துள்ள அந்த துணை மின் நிலையத்தில் கடந்த 20ஆம் தேதி இரவு திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இது பூமிக்கடியில் அமைக்கப்பட்டுள்ள மின் நிலையம் ஆகும்.
தீ விபத்தை அடுத்து ஊழியர்கள் பலர் உடனடியாக வெளியேறினர். சிலர் உள்ளுக்குள் சிக்கினர்.
32 வயதான சுந்தர் நாயக் என்ற உதவிப் பொறியாளர் கொரோனா கிருமித் தொற்றில் இருந்து மீண்டு கடந்த ஜூலை 25ஆம் தேதிதான் மீண்டும் பணியில் சேர்ந்திருந்தார். இவருக்கு மனைவியும் இரு மகள்களும் உள்ளனர்.
விபத்து ஏற்பட்ட சில நிமிடங்களுக்குப் பிறகு, இரவு சுமார் 11. 30 மணிக்கு மனைவியை கைபேசி மூலம் தொடர்பு கொண்ட சுந்தர், தாம் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பு மிகக் குறைவு என்று தெரிவித்துள்ளார். தங்களது இரு மகள்களையும் நன்றாகப் பார்த்துக் கொள்ளுமாறு அவர் மனைவியிடம் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
மற்றொரு உதவிப் பொறியாளரான மோகன்ராவ் என்பவரும் தனது குடும்பத்தாரையும் சக ஊழியர் ஒருவரையும் தொடர்புகொண்டு தாம் மரணத்தின் விளிம்பில் இருப்பதாகக் கூறியுள்ளார்.
மின் நிலையம் முழுவதும் அடர்ந்த புகை பரவியுள்ளது என்றும் அரை மணி நேரத்தில் மீட்புக் குழுவினர் தங்களை மீட்காவிட்டால் உயிரிழப்பது உறுதி என்றும் சீனிவாஸ் என்பவர் தமது குடும்பத்தாரிடம் கூறியுள்ளார்.
இவர்கள் மறுநாள் சடலமாக மீட்கப்பட்டனர்.

